பிரதமர் மோடி பாராட்டுப்பெற்ற.. ஜி.வி. பிரகாஷ் குமாரின் திருவாசகம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த திருவாசகத்தின் முதல் பாடல், வரும் ஜனவரி 22 அன்று அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில், இதன் ஒரு பகுதியை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அரங்கேற்றி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.
அன்று பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ் அடையாளமும் இணைந்த அந்தப் பொழுதில், ஜி.வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சி தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடியே நேரில் அமர்ந்து ரசித்த இந்தப் பாடல், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை நவீன இசை வடிவில் வெளிப்படுத்தி, மெய்சிலிர்க்க வைத்தது.

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைப்பதில் திறமையானவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் எனப் பல வடிவங்களில் முத்திரைப் பதித்துள்ளார். திருவாசகம் வழியாக தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளத்தை அளிக்க அவர் முனைந்திருக்கிறார்.
திருவாசகம் முழுவதையும் ஒரு இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்டகாலக் கனவு. முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து உலகிற்கு கொண்டு செல்லும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க, புதிய இசை அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.
இந்த மாபெரும் இசைப் பயணத்தின் முதல் படியாக, பிரதமர் மோடியின் முன்னிலையில் பாடப்பட்ட அதே முதல் பாடல், ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷின் யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. பிரதமர் மோடியின் பாராட்டையும் பெற்றிருப்பதால், இந்தப் பாடலுக்கான எதிர்பார்ப்பு ஆன்மிக மற்றும் இசை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











