கந்தன் மலை படத்தில் ஹெச். ராஜா வம்பை விலை கொடுத்து வாங்குறாரே.. அமைச்சர் சேகர் பாபு மீது டைரக்ட் அட்டாக்!
சென்னை: பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர் ஹெச்.ராஜா. அந்தக் கட்சி சார்பாக பேசுகிறேன் என்கிற பெயரில் ஏகப்பட்ட வில்லங்க கருத்துக்களை வெளியிடுபவர். அவர் இப்போது கந்தன் மலை என்ற படத்தில் நடித்திருக்கிறார். வீரக்குமார் என்பவர் இயக்கியிருக்கும் இப்படமானது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தில் ஏகப்பட்ட சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தஞ்சாவூரில் பிறந்த ஹெச்.ராஜா சனாதன தர்மத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர். ஹிந்துக்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் அந்நியர்கள்; அவர்கள் இந்தியாவில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற மோசமான சித்தாந்தத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பவர். பாஜகவில் சேர்ந்து அரசியல் பயணத்தை செய்துவரும் அவர்; கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசிய செயலாளர்: எம்.எல்.ஏவாக இருந்தபோது தன்னுடைய தொகுதிக்கு பெரிய அளவில் திட்டங்களை எதுவும் கொண்டுவரவில்லை. அதனால் அவர் மீது காரைக்குடி மக்கள் இன்னமும் காண்டாக இருக்கிறார்கள் என்பதுதான் பலரது கருத்து. அதற்கு பிறகு வேறு எந்த தேர்தலிலும் வெற்றி பெறவே இல்லை. இனிமேல் தேர்தல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த அவர் பாஜகவில் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.

சர்ச்சையான ராஜா: அவர் தேசிய செயலாளராக இருந்தபோது நாளொரு சர்ச்சையை கிளப்புபவர். உயர் நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசியது, மற்ற மதத்தினரை இழிவுப்படுத்துவது; இந்தியா இவர்களது சொந்த நாடு மாதிரி மற்ற மதத்தினரை இங்கிருந்து கிளம்ப சொல்வது என சேட்டைகள் பல செய்துகொண்டிருந்தார். அதன் காரணமாக அவருக்கு எதிர்ப்புகளும் கடுமையாக எழுந்தன என்பதும் நினைவுகூரத்தக்கது.
விஜய்யுடன் பஞ்சாயத்து: மேலும் மெர்சல் பட சமயத்தில் விஜய்யை ஜோசப் விஜய் என மதரீதியாக சுருக்கி பேசி சர்ச்சையை கிளப்பினார். அப்படி அவர் செய்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவருக்கு எதிராக நின்றது. காலங்கள் மாற காட்சிகளும் மாறும் என்பதற்கேற்ப தேசிய செயலாளர் பதவி அவரிடமிருந்து பறிபோனது. அதற்கு பிறகு சத்தமே இல்லாமல் இருந்த ராஜா ஷர்மா இப்போது கந்தன் மலை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை வீரக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய வசனங்கள்: இப்படத்துக்கு ஒரு தியேட்டர்கூட கிடைக்காததால் யூடியூபில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அங்கும் பெரிய ரெஸ்பான்ஸ் எல்லாம் இல்லை. அதேசமயம் படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய வசனங்களை எடுத்துப்போட்டு தமிழ்நாட்டு ரசிகர்கள் அடிக்க தொடங்கியிருக்கிறார்கள். முக்கியமாக தமிழ்நாடு அறநிலைய துறை கோயிலுக்குள் நுழைந்தால் விளங்காது என்றும்; அந்தத் துறையின் அமைச்சர் சேகர் பாபுவை அல்லேலூயா பாபு என மதரீதியாக பேசும் வசனமும் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள், சினிமாதான் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இப்போது அதிலும் ஹெச்.ராஜா போன்ற விஷமிகள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அமைச்சரையும், தமிழ்நாடு அரசின் துறையையும் மத ரீதியாகவும், கீழ்மையாகவும் பேசிய ராஜா மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











