ஹெச்.வினோத்தை டீலில் விட்ட கமல் ஹாசன்?.. கூட்டணி பிரிய இதுதான் காரணமா?.. போங்க ஆண்டவரே
சென்னை: கமல் ஹாசனும், ஹெச்.வினோத்தும் இணைந்து ஒரு படம் பணியாற்றுவதாக இருந்தது. அதுதொடர்பான அறிவிப்பு வீடியோவும் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாகவும்; அதற்கான காரணம் குறித்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

தீரன்: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.
அஜித்துடன்கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இயக்கிய துணிவு படம் ஹிட்டானது.
கமல் - ஹெச்.வினோத்: துணிவு படத்தை முடித்த பிறகு வினோத் யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கமல் ஹாசனுடன் அவர் இணையவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. அது ஏறத்தாழ உறுதியும் செய்யப்பட்டுவிட்டதாகவும்; படத்தின் கதை கமலுக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இருவரும் இணையும் படத்துக்கான அறிவிப்பு வீடியோவும் வெளியாகி ட்ரெண்டானது.
தாமதம்: ஆனால் யாரும் எதிர்பார்க்காதவிதமாக படத்தின் ஷூட்டிங் தாமதமாகிக்கொண்டே இருக்கிறது. கமல் ஹாசனும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமிட்டாகிவிட்டார். மேலும் தக் லைஃப் படத்திற்கு அவர் முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் கமல் - ஹெச்.வினோத் படம் என்னவானது என்ற சந்தேகம் ரசிகர்களிடையே கடந்த சில வாரங்களாகவே இருந்துவருகிறது.
ட்ராப் ஆகிவிட்டதா?: இந்நிலையில் கமல் ஹாசன் - ஹெச்.வினோத் படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும்; அதற்கான காரணம் குறித்தும் புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. அதன்படி கமல் ஹாசனுக்கு வினோத் காவல் துறை சப்ஜெக்ட்டை சொன்னாராம். ஆனால் கமலுக்கு அது பிடிக்கவில்லையாம். அதுமட்டுமின்றி கதையையும் கமல் ஹாசன் மாற்ற சொன்னதில் வினோத்துக்கு உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
தீரன் 2: அதேசமயம் அந்தக் கதையை தீரன் அதிகாரம் ஒன்றின் இரண்டாம் பாகமாக உருவாக்க வினோத் முடிவு செய்துவிட்டதாகவும் அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தில் கார்த்தி நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் கமலும் வினோத்தும் இணைந்திருந்தால் தரமான சம்பவமாக இருந்திருக்கும். ஆனால் அது மிஸ்ஸாகிவிட்டதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வமானதுதானா என்பது இன்னமும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











