Karthi - ஹெச்.வினோத்துடன் மீண்டும் இணைகிறாரா கார்த்தி?.. தரமான சம்பவமா இருக்குமே
சென்னை: Karthi(கார்த்தி) தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

வந்தியத்தேவன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.
ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் இந்த தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏமாற்றம்: படத்தின் ட்ரெய்லர் நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தினாலும் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கார்த்திக்கு என்னதான் ஆச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். முக்கியமாக இது ராஜுமுருகன் படம் மாதிரியே இல்லை அவ்வளவு போராக படம் செல்கிறது. படம் சுமார் ரகத்துக்கும் கீழேதான் என ஓபனாகவே சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்தனர்.
அடுத்த படங்கள்: இந்த சூழலில் கார்த்தி அடுத்ததாக கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் கார்த்தி ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த சூழலில் கார்த்தியின் இன்னொரு படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தீரன் அதிகாரம் ஒன்று: அதாவது கார்த்தியின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தீரன் அதிகாரம் ஒன்று. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை வினோத் உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு கார்த்தியும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வினோத் அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அதனை முடித்த பிறகு தீரன் 2 படத்தை அவர் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











