பெற்றோரால் கடத்தப்பட்ட 'தொரட்டி' ஹீரோயின்... மீட்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஹீரோ ஆட்கொணர்வு மனு!
சென்னை: பெற்றோரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கதாநாயகியை மீட்கக் கோரி, தொரட்டி படக்குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'ஷாமன்' எனும் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தொரட்டி. பல சர்வதேச விழாக்களில் பங்கேற்றுள்ள இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் சத்தியகலா.

தொரட்டி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நாயகி சத்தியகலாவை அவரது பெற்றோர் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தன்னுடைய தந்தை மற்றும் அவரது 2வது மனைவிக்கு தான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என படப்பிடிப்பு சமயத்தில் பலரிடம் சத்தியகலா புலம்பியதாகக் கூறப்பட்டுள்ளது. தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்யவதாக நாயகி சத்தியகலா படக்குழுவினரிடம் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சத்தியகலா வசித்து வந்த சென்னை வீட்டில் தற்போது யாரும் இல்லை எனவும், அவரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே பெற்றோரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு வந்த போது, இதனை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கருணாகரன் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்வதாக தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











