வருங்கால கணவருடன் பூஜையில் பங்கேற்ற ஹன்சிகா.. முழு வீச்சில் தயாராகும் திருமண ஏற்பாடுகள்!
சென்னை: தனது தோழியின் கணவரையே ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பரபரப்பு கிளம்பிய நிலையில், அதை பற்றி கண்டு கொள்ளாமல் தனது திருமண வேலைகளை முழு வீச்சில் செய்து வருகிறார் நடிகை ஹன்சிகா.
31 வயதாகும் நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்து தனது காதலரை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தினார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் டவர் முன்பாக ஹன்சிகாவுக்கும் சோஹேல் கத்தூரியாவுக்கும் ரொமாண்டிக் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் திருமணத்திற்கு முன்பான பூஜை ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்
நடிகை ஹன்சிகா மற்றும் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியா இருவருக்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமணத்துக்காக முழு வீச்சில் நடிகை ஹன்சிகா தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட பூஜை ஒன்றில் மணமக்கள் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பிரான்சில் நிச்சயம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் முன்பாக ஹன்சிகாவை ப்ரபோஸ் செய்து அவரது விரலில் மோதிரம் மாட்டினார் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியா. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இவரத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என நடிகை ஹன்சிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

தோழியின் கணவர்
நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போகும் அந்த தொழிலதிபர் யார் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த சோஹேல் என்றும் அவருக்கு ஹன்சிகாவுடன் நடைபெற உள்ளது இரண்டாம் திருமணம் என்றும் தோழியின் திருமணத்தில் ஹன்சிகா நடனம் ஆடிய வீடியோக்களையும் ஷேர் செய்து பஞ்சாயத்தை பெரிதாக்கினர்.

ஹன்சிகா அமைதி
ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் இப்போதைக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், நான் என் மனசுக்கு பிடிச்சவரை திருமணம் செய்து கொள்கிறேன் என திருமண ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தி வருகிறார் நடிகை ஹன்சிகா.

திருமணத்திற்கு முன்பு பூஜை
நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு முன்பாக துர்கா தேவிக்கு செய்யப்படும் மாதாகி சவுகி பூஜையை நேற்று இரவு மேற்கொண்டுள்ளார். அந்த பூஜையில் மணமகன் சோஹேல் கத்தூரியாவும் ஹன்சிகாவும் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ரெட் கலர் டிரெஸ்
ஹன்சிகா சிகப்பு நிற ஜாக்கெட் மற்றும் சிகப்பு நிற சேலையில் செம அழகாக ஜொலிக்க, ஹன்சிகாவின் வருங்கால கணவர் சிகப்பு நிற ஷெர்வானி உடையில் மணமகனாகவே மாறிவிட்டார். உறவினர்கள் சூழ நடைபெற்ற பூஜைக்கு ஹன்சிகா காரில் இருந்து வந்து இறங்கும் வீடியோவும் மணமகன் சோஹேல் கத்தூரியாவுடன் நெருக்கமாக நிற்கும் போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

நயன்தாரா திருமணம் போல நடக்குமா
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் பலரது முன்னிலையில் நடைபெற்றன. அதே போல ஹன்சிகாவும் தனது திருமணத்துக்கு முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், ஹன்சிகாவின் திருமணமும் ஓடிடியில் வெளியாக போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











