Ayodhya Ram Mandir: அடடே.. அயோத்தி ராமர் கோயிலுக்கு அள்ளிக் கொடுத்த ஹனுமான் டீம்.. இத்தனை கோடியா?
ஹைதராபாத்: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ராம்சரண், பிரபாஸ், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய ஹனுமான் படக்குழு பெரிய தொகையை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில்: ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் உலக பிரசித்தி மிக்க ராமர் கோயிலை கட்ட வேண்டும் என முடிவு செய்து பல போராட்டங்கள் வழக்குகளை சந்தித்து இறுதியாக ராமர் கோயிலை அங்கே கட்டியுள்ளனர். அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று வருகின்றனர்.
ரஜினிகாந்த் பேச்சு: 500 வருட பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைத்திருக்கிறது என ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சென்றுள்ளனர். நடிகர் தனுஷ் தனது மகனுடன் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சென்ற காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. காமெடி நடிகர் சதீஷுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாடிகன் போல ராமர் கோயில்: நடிகை கங்கனா ரனாவத் அயோத்திக்கு சென்று ராமர் கோயிலை பார்வையிட்ட நிலையில், வாடிகனில் உலக பிரசித்தி பெற்ற தேவாலயம் போல நம் நாட்டில் ராமருக்கு என்று பிரத்யேக கோயில் அமைக்கப்பட்டு இருப்பது வரலாற்று சிறப்புமிக்க விஷயம் என்று கூறியிருக்கிறார். தென்னிந்தியாவில் திருப்பதி இருக்கும் நிலையில், வட இந்தியாவுக்கு ராமர் கோயில் என்கிற நிலை உருவாகும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹனுமான் படக்குழு நன்கொடை: தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா அய்யர், வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஹனுமான் படம் ஆதிபுருஷ் படத்தை விட வட இந்தியா மற்றும் ஆந்திராவில் கொண்டாடப்பட்டு வருகிறது. 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வரும் ஹனுமான் படம் இதற்கு காரணமே ஜெய் ஸ்ரீ ராமர் தான் எனக்கூறி டிக்கெட் ஒன்றுக்கு தலா 5 ரூபாய் என மொத்தம் 2.6 கோடி ரூபாயை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.
பிரபாஸ் 50 கோடி கொடுத்தாரா?: முன்னதாக ராமர் கோயிலுக்கு நன்கொடையாக பிரபாஸ் 50 கோடி கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில், அதெல்லாம் சுத்த பொய் என்றும் நடிகர் பிரபாஸ் ராமர் கோயிலுக்கு அப்படி எந்த தொகையும் கொடுக்கவில்லை என அவரது டீம் விளக்கம் கொடுத்திருந்தது. கடந்த ஆண்டு ராமராக பிரபாஸ் நடித்து வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அமிதாப் பச்சன் 14 கோடிக்கு ராமர் ஜென்ம பூமியான அயோத்தியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் இன்று நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











