Happy birthday Anjali - கலைஞருக்கு கடிவாளமா இல்லவே இல்லை.. பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சலி
சென்னை: Happy Birthday Anjali (பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சலி) தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான அஞ்சலிக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்
கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு க்ளாசிக்காக இருந்ததை அடுத்து முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார் அஞ்சலி.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டே சென்ற அஞ்சலி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனந்தி, கனி: அஞ்சலி நடித்த படங்களில் தன்னுடைய கேரக்ட்ரை எப்போதும் பேச வைத்துவிடுவார். குறிப்பாக கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நிஜமாதான் சொல்றியா என அவர் கேட்கும் இடத்தில் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கிறங்கிப்போயினர். கற்றது தமிழில் தனது நடிப்பை நிரூபித்த அஞ்சலிக்கு அடுத்த முக்கியமான படம் அங்காடித் தெரு. கனி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். குறும்பான பெண்ணாக படத்தில் வலம் வரும் அஞ்சலி ஒரு சங்கடமான சூழ்நிலையை ஹீரோவிடம் சொல்லும்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பார் கலங்கடித்திருப்பார்.

காணாமல் போன அஞ்சலி: இப்படி பல படங்களில் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்த அஞ்சலி தெலுங்குக்கும் சென்றார். ஆனால் திடீரென அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக தமிழ் சினிமாவிலிருந்து சில காலம் காணாமல் போனார். அதனையடுத்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரீ என்ட்ரி கொடுத்த அஞ்சலி அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படத்தில் நடித்தார். இருப்பினும் அவருக்கு பழையபடி வாய்ப்புகள் சரளமாக கிடைக்கவில்லை
ராம் இயக்கத்தில்: கடைசியாக ஹாட்ஸ்டாரில் வெளியான ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் மூலம் எப்படி தன்னை மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினாரோ அதேபோல் ஏழு கடல் ஏழு மலை படமும் தனக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் அடுத்த ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் அஞ்சலி இருக்கிறார். அவருக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்.
போல்ட் அஞ்சலி: தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி பத்து வருடங்கள் நிலைப்பதே பெரிய விஷயம். அதற்கு தனது பயணத்தில் தெளிவான பார்வையும், தைரியமாக முடிவெடுக்கும் பக்குவமும் வேண்டும். அது அஞ்சலிக்கு நிறையவே வாய்த்திருக்கிறது. ராம் இயக்கத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. அதற்கு பெரிய திறமை வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக கவனிப்பார் என்ற ஒரு பேச்சு திரையுலகில் உண்டு. அப்படிப்பட்ட ராம் இயக்கத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்திருப்பதன் மூலம் அஞ்சலி எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

வித்தியாச கதாபாத்திரங்கள்: அஞ்சலிக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் பெரும்பாலானவை தனித்துவம் மிக்கது. அவற்றில் எங்கேயும் எப்போதும் மணிமேகலை, பாவக்கதைகள் ஜோதி கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் எங்கேயும் எப்போதும் மணிமேகலை ஹீரோவை டாமினேட் செய்யும் கதாபாத்திரம். ஆணாதிக்க சிந்தனை வெகுவாக இருக்கும் இச்சமூகத்தில் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். கொஞ்சம் பிசறினாலும் அதிகப்பிரசங்கி என்ற பெயரை அக்கதாபாத்திரம் எடுத்துவிடும்.
ஆனால் எங்கேயும் எப்போதும் மணிமேகலையை பார்த்து அனைவருமே ரசிக்க செய்தார்கள். ஏனெனில் அந்த கதாபாத்திரத்தின் மூலம் காதலையும், கண்டிப்பையும் ஒருசேர வெளிப்படுத்தியிருப்பார் அஞ்சலி. அதுமட்டுமின்றி ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல. அவளுக்கும் ஒரு சுயமரியாதை இருக்கிறது. காதல் என்றால் பெண் மட்டும்தான் ஆணை டிப்பெண்ட் செய்து இருக்க வேண்டும் என்ற நிலையெல்லாம் சும்மா என்பதை தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
அதேபோல் பாவக்கதைகள் ஜோதி கதாபாத்திரத்தை ஏற்பதற்கு எந்த ஹீரோயினும் ஒத்துக்கொள்ளமாட்டார். காரணம் அந்தக் கதாபாத்திரம் தன்பாலின ஈர்ப்பு உடைய கதாபாத்திரம். பொதுவாக தன் பாலின ஈர்ப்பாளர்களை பார்த்தாலே முகம் சுளிப்பவர்கள்தான் இங்கு அதிகம். அதனால் அந்த மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டால் தனது மார்க்கெட் சரிந்துவிடுமோ என நடிகைகள் அஞ்சுவார்கள். அஞ்சலியோ அதற்கெல்லாம் அஞ்சாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று கலைக்கு கடிவாளம் இல்லை என்பதை ரசிகர்களுக்கும், மற்ற நடிகைகளுக்கும் உணர்த்தினார்.
தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் கண்களுக்கு அஞ்சலி தெரியவில்லைபோல. அஞ்சலியிடம் எந்தக் கதாபாத்திரத்தை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர் அதற்கு நிச்சயம் நியாயம் செய்யக்கூடியவர். எனவே தமிழ் இயக்குநர்கள் அஞ்சலியை நிச்சயம் ஆரோக்கியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ராமின் கண்களிலிருந்து பார்த்தால் அஞ்சலியின் அருமை புரியும். அஞ்சலிக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications