ஹாப்பி பர்த்டே அட்லி.. இன்னைக்காவது ஷாருக்கான் படத்தோட அப்டேட் வெளியாகுமா? ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: இயக்குநர் அட்லி தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
கோலிவுட்டில் அட்லி இயக்கிய 4 படங்களுமே வசூல் வேட்டை நிகழ்த்திய நிலையில், அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்கிறார் அட்லி.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் லயன் என கசிந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குருவை மிஞ்சிய சிஷ்யன்
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லி, அவரை போலவே பிரம்மாண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறி உள்ளார். அடுத்ததாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் படத்தையே இயக்க உள்ள அட்லி குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறி உள்ளார்.

35வது பிறந்தநாள்
1986ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மதுரையில் பிறந்த இயக்குநர் அட்லி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குநர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்
ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லி அடுத்ததாக தளபதி விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கினார். இந்நிலையில், தளபதி விஜய் ரசிகர்கள் காலை முதலே ஏகப்பட்ட டிரெண்டிங் ஹாஷ்டேக்குகளை ட்விட்டரில் தெறிக்கவிட்டு தெறி இயக்குநருக்கு மெர்சலாக பிகில் அடித்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இன்னைக்காவது வருமா
பிகில் படத்தை முடித்த கையோடு அட்லி மற்றும் ஷாருக்கான் பட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், அட்லி பிறந்தநாளான இன்றாவது அட்லி - ஷாருக்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகுமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நாயகி நயன்தாரா
ராஜா ராணி படத்திற்காக நயன்தாராவை எப்படி சம்மதிக்க வைத்து மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தாரோ அட்லி அதே போல நயன்தாராவை பாலிவுட் படத்தில் நடிக்கவும் சம்மதிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் நயனுடன் இணைந்து பிரியாமணியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தனை படங்களா
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஹாப்பி நியூ இயர், ஹாலிவுட் படமான கில் பில் மற்றும் வெப்சீரிஸான மணி ஹெய்ஸ்ட் என பல கதைகளை மிக்ஸ் செய்து ஷாருக்கானுக்காக லயன் எனும் தெலுங்கு பட தலைப்பை வைத்து அதிரடியாக அட்லி புதுப்படத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானால் அட்லி ரசிகர்களுக்கு அது வேற லெவல் பிறந்தநாள் பரிசாக அமையும்.


Click it and Unblock the Notifications











