சவுத் சூப்பர் ஸ்டார் காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள்.. காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : அழகும் அம்சமும் பொருந்திய தனது கட்டழகு அமைப்பாலும் முட்டக்கண்ணு முழியாலும் நாம் அனைவரையும் நடிப்பினால் விழுங்கி வந்தவர் நடிகை காஜல் அகர்வால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
ஜூன் 19ஆம் தேதியான இன்று இவர் தனது 34வது பிறந்தநாளை தனது குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு தன்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை சொல்லியும் காமன் டிபி-யை வெளியிட்டும் அதை பகிர்ந்தும் வருகின்றனர்.

சிறிய கதாபாத்திரம்
இந்திய திரைப்படத் துறையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் முதலில் இந்தியில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான "கியூன்!! ஹோ கயா நா" படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். பின் இவர் தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்
அதே ஆண்டு சந்தமாமா என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய ஒரு வெற்றியை பாக்ஸ் ஆபீஸில் கொடுத்ததன் மூலம் திரைதுறையில் மிகவும் பிரபலமானார். இது தெலுங்கு திரைப்படதுறையில் இவரின் நடிப்புத் திறமையை அனைவருக்கும் வெளிக்காட்டி அடையாளப்படுத்தியது. இந்நிலையில் இவரது முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்திருந்தாலும், இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை உலக அளவில் பெற்றுத்தந்தது மகதீரா என்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் ஆகும்.

பல விருதுகள்
பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த மகதீரா படத்தில் இவர் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு நல்ல திரைக்கதை அம்சத்துடன் வெளியானதால் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ்களை வசூல் மழையால் தெறிக்க விட்டது. பின்னாளில் இது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும் இவர் மகதீரா படத்திற்காக பல விருதுகளை பெற்றார்.

கதாநாயகி அந்தஸ்து
தெலுங்கில் வெற்றிகரமாக நடித்து வந்த அதேவேளையில் தமிழிலும் தனது அறிமுகத்தை இவர் கொடுத்து வந்தார். தமிழில் பரத் நடித்து இயக்குனர் பேரரசு இயக்கிய பழனி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் இவர் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திலும் அதைத் தொடர்ந்து பொம்மலாட்டம், மோதி விளையாடு என நடித்து வந்தவருக்கு கார்த்தி இணைந்து நடித்த நான் மகான் அல்ல படம் இவருக்கு கதாநாயகி அந்தஸ்தை தமிழ் ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் பல ரசிகர்களையும் இங்கு உருவாக்கிக் கொடுத்தது.

பல கோடி ரசிகர்கள்
இவ்வாறு தனது வெற்றியை படிப்படியாக நிலைநிறுத்திக் கொண்ட காஜல் அகர்வால் இப்போது அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகர்களாக உள்ள பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவர் மாற்றான், துப்பாக்கி, மாரி, பாயும் புலி, ஜில்லா என எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்து இன்றும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு பல கோடி ரசிகர்களுடன் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

பாடகியானார்
நடிப்பில் தன்னுடைய சிறந்த திறமையை வெளிக்காட்டி வந்த இவர் ஒரு சிறந்த பாடகரும் ஆவார். கன்னடத்தில் வெளியான சக்கரவியூகா என்ற படத்தில் "ஏனைது" என்ற பாடலை இசையமைப்பாளர் தமன் இசையில் பாடியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
இவ்வாறு தனது கொஞ்சும் நடிப்பால் பல விருதுகளையும் பல கோடி ரசிகர்களின் மனதையும் அள்ளி வந்த இவருக்கு இன்று பிறந்தநாள். ஜூன் 19ஆம் தேதியான இன்று இவர் தனது 34வது பிறந்தநாளை மிகப் பிரமாதமாக தனது குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்.

காமன் டிபி
இவருக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது பிறந்த நாளைக்கு காமன் டிபி-ஐ வெளியிட்டும் அதை பகிர்ந்தும் காஜல் அகர்வாலை இந்நாளில் சந்தோஷப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











