அஞ்சாதே நரேனுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து!
சென்னை : ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத எதார்த்தமான நடிகராக அனைவரின் மனதிலும் பதிந்து உள்ளவர் நடிகர் நரேன்.
Recommended Video
தமிழில் இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவை அனைத்தும் இன்று வரை தமிழ் சினிமாவில் பேசக்கூடிய திரைப்படங்களாக இருந்து வருகிறது.
தமிழ், மலையாளம் என பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் நடிகர் நரேன் அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகினர் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வித்தியாசமான மேக்கிங்
இயக்குனர் மிஷ்கினின் திரைப்படங்களுக்கு என்றாலே தனி ரசிகர் கூட்டம் இன்றுவரை இருந்து வருகிறது. மற்ற படங்களைப் போலல்லாமல் மிகவும் வித்தியாசமாக படங்களை எடுப்பதில் வல்லமை படைத்த இயக்குனர் மிஷ்கின் இயக்குனராக அறிமுகமான "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் நரேன்.

தாமதமாகவே அங்கீகரிக்கப்பட்டது
நரேனின் எதார்த்தமான நடிப்பு "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும் ஆரம்பத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத இந்த திரைப்படம் பின் படத்தில் வரும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து கொஞ்சம் தாமதமாகவே திரைப்படம் ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றிபெற்றது.

மிஷ்கின் நரேன் காம்போ
இவ்வாறு தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா பிரியர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுத்த நிலையில் மிஷ்கின் நரேன் காம்போ இன்றுவரை தொடர்ந்து கொண்டு வருகிறது.

இயக்குனர் சத்யன் அந்திக்காட்
தமிழில் நடிப்பதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி இருக்கும் நரேன் "நிழல்குத்து " என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்திருக்கும் நரேன் இயக்குனர் சத்யன் அந்திக்காட் உடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு "அச்சுவின்டே அம்மா" என்ற திரைப்படத்தில் இணைந்த நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் 2009 ஆம் ஆண்டு "பாக்கியதேவதா" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அஞ்சாதே
தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய அறிமுகம் இருந்த நிலையில்
2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்த "அஞ்சாதே" திரைப்படம் இவரை சிறந்த நடிகராக கொண்டாட வைத்தது. விறுவிறுப்பான திரைக்கதை, காதல், நட்பு என தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத புதுமையான மேக்கிங் ஸ்டைல் என அனைத்திலும் சிறப்பாக அமைந்த அஞ்சாதே திரைப்படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.

மீண்டும் மிஷ்கினுடன்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என தொடர்ந்து இயக்குனர் மிஷ்கினுடன் பயணித்துக்கொண்டிருந்த நரேன் மீண்டும் 2012 ஆம் ஆண்டு "முகமூடி " திரைப்படத்தில் மிஸ்கின் உடன் இணைந்து பணியாற்ற இந்த முறை வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இவ்வாறு தமிழ் மலையாளம் என தொடர்ந்து தனது பங்களிப்பு அளித்து வரும் நரேன் சமீபத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் வந்து அசத்தி இருந்ததை தொடர்ந்து இப்போது அதர்வா நடிப்பில் உருவாகிவரும் "ஒத்தைக்கு ஒத்த" படத்திலும் நடித்து வருகிறார்.

பிறந்தநாள்
இவ்வாறு தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நரேன் அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











