Happy Birthday Vijay - தடைகளை வென்று சரித்திரம் படைப்பதில் மாஸ்டர் - பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்
சென்னை: Happy Birthday Vijay (பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்) இந்திய சினிமாவின் புகழ் பெற்ற ஹீரோக்களில் ஒருவரான விஜய்யின் 49ஆவது பிறந்தநாள் இன்று.
விஜய். இந்தப் பெயரை கேட்டாலே பலரும் கொண்டாடி தீர்ப்பார்கள். தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் நுழைந்த அவர் திறமையின் துணையோடு இப்போது வசூல் சக்கரவர்த்தியாக கோலிவுட்டில் திகழ்ந்துவருகிறார். சினிமாவுக்குள் அவர் வந்தபோது விஜய் மீது தொடுக்கப்பட்ட விமர்சன அம்புகள் ஏராளம். எப்போதும் எதையும் அமைதியாக எதிர்கொள்ளும் விஜய் அதையும் அமைதியாக எதிர்கொண்டு இன்று எதிரிகளை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறார்.
இளைய தளபதி: விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இருந்தார்தான். ஆனால் சினிமாவில் வெல்வதற்கும், தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கும் தந்தையின் துணை மட்டும் போதாது. தனக்குள்ளே ஒரு திறமை வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறிய விஜய் பூவே உனக்காக படத்தின் மூலம் ரேஸ் ட்ராக்குக்குள் வந்தார். அப்போதிருந்து அவர் முந்திய ஹீரோக்கள் ஏராளம், தாண்டிய தடைகள் ஏராளம். இதனால் இளைய தளபதி ஆனார்.

கமர்ஷியல் கிங் தளபதி: குடும்ப ரசிகர்களை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருந்த விஜய்க்கு திருமலை பெரும் திருப்புமுனை. அங்கிருந்து அவர் அடித்த கில்லி கமர்ஷியல் பாதையில் விஜய்யை ஆழமாக விதைத்தது. அதனைத் தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என கமர்ஷியல் படங்களில் நடித்து தன்னை கமர்ஷியல் கிங்காக மாற்றிக்காட்டினார்.
ஒருகட்டத்தில் விஜய் தொட்டதெல்லாம் ஹிட்டாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. ஆனாலும் எல்லோருக்கும் வரும் சறுக்கல் அவருக்கும் வந்தது. வரிசையாக அவரது படங்கள் அடிவாங்கின. இருப்பினும் மனம் தளராத விஜய் மீண்டும் காவலன் மூலம் கம்பேக் கொடுத்தார். அதுவரை பஞ்ச் டயலாக் பேசி பரபரக்க வைத்த விஜய் காவலனில் பக்குவமாக தோன்றினார். தொடர்ந்து அவர் நடித்த துப்பாக்கி, மெர்சல் உள்ளிட்ட படஙக்ள் மெகா ஹிட்டாகின.
என்ன காரணம்: இதற்கிடையே விஜய்யை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிவிட வேண்டுமென்பதில் சந்திரசேகர் தெளிவாக இருந்தவர். அதனால்தான் அவரது ஒவ்வொரு மூவ்வும் விஜய்யை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாக இருந்தது. அதன் விளைவாக விஜய் ரசிகர் மன்றம் 2008ஆம் ஆண்டு இதே நாள் நற்பணி இயக்கமாக மாறியது. அதற்கென்று தனிக்கொடியும் உருவானது. ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறியதை அடுத்து விஜய்யின் நடவடிக்கையில் நிறையவே மாற்றங்கள் இருந்தன. அந்த மாற்றங்கள்தான் அவரது படங்களுக்கு பிரச்னைகளை உருவாக்கவும் செய்தன.
உண்ணாவிரதம்: முதலில் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர் அந்த மேடையில் காட்டமாகவே பேசினார். முதன்முதலில் விஜய்யை சுற்றி எழுந்த சர்ச்சை அது. இருந்தாலும் அந்த உண்ணாவிரதத்திலும், பேச்சிலும் ஒரு நியாயமான கோபம் இருந்ததன் காரணமாக அந்த சர்ச்சை பெரிய பிரச்னையாக மாறாமல் அப்படியே அமுங்கிப்போனது.
அரசியல் எனும் கடல்: விஜய்யின் படங்களுக்கு பிரச்னைகள் பலமாக எழ ஆரம்பித்ததன் முதல் புள்ளி புதுக்கோட்டையில். விஜய் நற்பணி இயக்கம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது.அப்போது பேசிய விஜய் அரசியல் எனும் கடலில் இறங்கனும்னா ஆழம் பார்க்கணும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன் என்றார். அதனையடுத்துதான் அரசியல்வாதிகளின் கண்கள் விஜய் மீது நிலைக்குத்தி நிற்க ஆரம்பித்தன. இதேபோன்ற கருத்தை புதுக்கோட்டையை தொடர்ந்து புதுச்சேரியிலும் பேசிவிட்டு ராகுல் காந்தியையும் சந்தித்தார்.
காவலனுக்கு சிக்கல்: நிலைமை இப்படி இருக்க காவலன் படத்துக்கு பிரச்னை உருவானது. 2011ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் தாமதமாக ரிலீஸாகியது. அரசியல் என்ற வார்த்தையை சொல்லிவிட்டு ராகுல் காந்தியை விஜய்யை சந்தித்தன் விளைவாகத்தான் அப்போது ஆட்சியில் இருந்த திமுக படத்துக்கு சிக்கல் கொடுத்ததாக வேகமாக தகவல் பரவியது. ஆனால் அதுதொடர்பாக விஜய் அமைதி காத்தார்.
அன்னா ஹசாரே, மோடி சந்திப்பு: தொடர்ந்து ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை சந்தித்து ஒரு தமிழன் என்ற முறையில் சந்திக்க வந்தேன் என்றார். எனவே விஜய் தேசிய அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் மாநில கட்சிகளுக்கு வர ஆரம்பித்தது. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியையும் 2014ஆம் ஆண்டு சந்தித்தார். இப்படி விஜய் பல தலைவர்களை சந்திப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்.
தலைவாவுக்கு வந்த சிக்கல்: இதற்கிடையே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா படத்துடைய பெயரின் கீழே டைம் டூ லீட் என்ற கேப்ஷன் ஜெயலலிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாக தலைவா படத்தை தமிழ்நாட்டில் தடை செய்தார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. உடனே கொடநாடுக்கு சென்றார் விஜய். அங்கு அவரை சந்திக்க மறுத்தார் ஜெயா. என்ன செய்வதென்று யோசித்த விஜய் ஆட்சியை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டார். வீடியோ வெளியான பிறகு தலைவா படமும் தமிழ்நாட்டில் வெளியானது.
துப்பாக்கி: தலைவா படத்துக்கு பிறகு சர்ச்சை ஓய்ந்துவிடும் என நினைத்த விஜய்க்கு துப்பாக்கி படத்தின் தலைப்பு பிரச்னை, இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்ற பிரச்னை வெடித்தது. ஒருவழியாக அந்தப் பிரச்னையும் தீர்ந்து படம் வெளியாகி மெகா ஹிட்டானது. ஆனால் அதற்கு அடுத்து வந்த படங்களுக்கு பிரச்னைகள் தொடர்ந்து வரவே செய்தன.
ஜோசப் விஜய்: அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனத்தை பார்த்து பதறியது பாஜக.உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தனர். ராஜாவோ ஒருபடி மேலே சென்று ஜோசப் விஜய் என பேச அது மத ரீதியான பாதையில் சென்றது. மேலும் ராஜாவுக்கு வேறு நடிகர்களின் ரசிகர்களும் சேர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தொடரும் பிரச்னைகள்: சர்கார் படத்தில் இலவசங்களுக்கு எதிரான காட்சிகள் வைத்தது, இளைய தளபதியிலிருந்து தள்பதியாக மாறியது என பல விஷயங்கள் இங்குள்ள கட்சிகளையும், கட்சிக்காரர்களை கொந்தளிப்பு அடைய செய்ததாகவே பலரும் கூறினர். ஆனாலும் விஜய் வழக்கம்போல் அமைதியான நதியாகவே இருந்தார்.
மாஸ்டர் தி பிளாஸ்டர்: தளபதியாக மாறிவிட்ட பிறகு மாஸ்டர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் விஜய். திடீரென வருமான வரித்துறையினர் விஜய்யின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அவரை அழைத்து செல்லவும் செய்தனர். சோதனையில் ஒன்றும் சிக்காததால் அவர்கள் அமைதியாக சென்றுவிட்டனர். ஆனால் நெய்வேலிக்கு விஜய் வந்த பிறகு அந்த இடமே ஆர்ப்பரித்தது. அப்போது அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இன்றுவரை ஃபேமஸ். அதுமட்டுமின்றி அந்த செல்ஃபியை பார்த்த சிலர் கொஞ்சம் புகைந்தார்கள் என்பதும் உண்மை.

ஒருபக்கம் அரசியல் சார்ந்த பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் குடும்ப பஞ்சாயத்தும் தலை தூக்கியது. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என தந்தை எஸ்.ஏ.சி ஆரம்பிக்க தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு எஸ்.ஏ.சியையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டார். மேலும் தந்தை, தாய்க்கு எதிராக நீதிமன்ற வாசலும் ஏறினார். இதுவும் அவரை சுற்றி பெரும் சர்ச்சையாக மாறியது.
ஏன் சமீபத்தில்கூட மாணவ, மாணவிகளை அவர் சந்தித்ததை வைத்து விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார். அதன் காரணமாகத்தான் இளைய தலைமுறைகளை சந்தித்தார் என பலர் அதை விவாதப்பொருளாக்கி சர்ச்சையாக மாற்றினர். அதற்கும் விஜய் எப்போதும் போல் சைலெண்ட் மோடில்தான் இருக்கிறார்.
ஒரு நடிகருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்னை வந்தாலே அவரால் அடுத்தடுத்து தனது கரியரில் கவனத்தை செலுத்த முடியாமல் போய்விடும். ஆனால் விஜய்க்கோ கடந்த பத்து வருடஙக்ளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையிலும் சரி, திரைப்படங்களுக்கும் சரி பிரச்னைகளும் சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இருப்பினும் விஜய் அதையெல்லாம் சைலெண்ட்டாக டீல் செய்து இப்போதைக்கு நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார். அந்த வகையில் அவர் எப்போதும் கோலிவுட்டின் ஆச்சரியமே.. தடைகளை வென்று சரித்திரம் படைத்த மாஸ்டருக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











