Leo - லோகேஷ் கனகராஜ் படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி.. பார்த்திபனின் குறும்பு.. ட்ரெண்டாகும் ட்வீட்
சென்னை: Leo Parthiban (லியோ பார்த்திபன்) லோகேஷ் கனகராஜ் - விஜய் படத்தில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி என்று பார்த்திபன் குறும்புடன் ட்வீட் செய்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். டிக்கெட் விலை எவ்வளவு இருந்தாலும் அதுகுறித்து எந்த கவலையும் படாமல் டிக்கெட் வாங்கினர்.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்: முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் தங்களுக்கு பரம திருப்தியை தந்திருப்பதாகவும் லோகேஷ் கனகராஜின் மேக்கிங் விஜய்யின் நடிப்பு அன்பறிவ் மாஸ்டர்ஸின் சண்டை காட்சி என அனைத்துமே அட்டகாசமாக இருப்பதாக பூரிக்கின்றனர். அதுமட்டுமின்றி படத்தின் லொக்கேஷன் பெரிய ப்ளஸ் எனவும் கூறினர்.
எல்சியூ: அதேபோல் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பில் உச்சக்கட்டமாக இருந்தது இப்படம் எல்சியூவில் வருமா என்பதுதான். ரிலீஸ்வரை அதுகுறித்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹிண்ட்டும் கொடுக்காமல் ரகசியம் காத்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் எல்சியூவில் வந்திருக்கிறது. கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் கேரக்ட்ரை படத்துக்குள் கொண்டு வந்த லோகேஷ் கனகராஜ் படத்தின் க்ளைமேக்ஸ் விக்ரம் கமல் விஜய்யிடம் ஃபோனில் பேசுவது போன்று முடித்திருந்தார்.

அப்செட்: இப்படி எல்சியூவுக்குள் படத்தை லோகேஷ் கொண்டு வந்திருந்தாலும் அது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்பதே உண்மை. அதேபோல் படத்துக்கு பொதுவான ரசிகர்களும் கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். இருந்தாலும் படம் முதல் நாளில் 140 கோடி ரூபாய்வரை உலக அளவில் வசூலித்திருப்பதாக கூறப்படும் செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பார்த்திபன் ட்வீட்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் - லியோ படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார். அதாவது இயக்குநர் ரத்னகுமார் லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திர பெயரான பார்த்திபன் என்ற பெயரை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

அந்த ட்வீட்டை ரசிகர் ஒருவர் பகிர்ந்து பார்த்திபனை டேக் செய்து உங்கள் பெயர் ஃபேமஸ் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த பார்த்திபன், "லோகேஷ் கனகராஜ் - விஜய் படத்தில் பெயர் அளவிலாவது இடம்பெற்றது மகிழ்ச்சி" என தெரிவித்தார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











