கமல் ஸ்டைலில் வாழ்த்து.. வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் அடுத்த ட்வீட்!
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நள்ளிரவு முதலே கமல்ஹாசன் பிறந்த நாள் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. சினிமா நடிகர்கள் தொடங்கி பல துறை பிரபலங்களும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கமல்ஹாசன் தனது தந்தை ஸ்ரீனிவாசன் திருவுருவச் சிலையை பரமக்குடியில் இன்று திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரும், விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ள நடிகருமான ஹர்பஜன் சிங் கமல்ஹாசனுக்கு அவரது கவிதை ஸ்டைலிலேயே பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் கமலுக்கு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
"சினிமா என்னும் துறவை
துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும்
உம் பெயர் சொல்லி!
கமல்ஹாசன்" என்ற கவிதையுடன், சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த பதிவை பார்த்த கமல் ரசிகர்கள், மச்சி நீ வேற லெவல் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











