பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு.. ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுத்து பொளந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகரும் ஆந்திராவின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடிப்பில் நேற்று அதாவது ஜூலை 24 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ஹரி ஹர வீர மல்லு. இந்த படத்தை கிரிஷ் ஜகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா உள்ளிட்டோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். படம் குறித்து தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " மொரட்டு சனாதன காவலர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. படத்தின் கதையை முகலாய பேரரசு காலத்தில் காட்டுகிறார்கள். குறிப்பாக அவுரங்சீப் காலத்தை காட்டுகிறார்கள். அவர் கொடுங்கோல் ஆட்சி செய்ததாகவும் இந்துக்களை மிரட்டி சித்திரவதை செய்து இஸ்லாமியர்களாக மாற்றியதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகன் சின்ன சின்ன திருட்டு வேலைகளைச் செய்து ஒரு பெரிய திருடனாக மாறி நிற்கிறார்.
கதாநாயகன் குறித்து கேள்விப்பட்ட குறுநில மன்னர் ஒருவர் விலைமதிப்பு இல்லாத கோஹினூர் வைரம் இருக்கு இல்லையா, அது அவுரங்கசீப்பின் டெல்லி செங்கோட்டையில் உள்ளது. அதைப் போய் நீ திருடிக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். அந்த வைரத்தை எடுத்து வந்தால் பெரிய பரிசுப்பொருள் தருவதாக கூறுகிறார். அதன் பின்னர் கதாநாயகன் பெரிய குழு ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, கோஹினூர் வைரத்தை திருட போகிறார், ஆனால் கதாநாயகனின் நோக்கம் அது மட்டும் கிடையாது, அது என்ன என்பதுதான் மீதிக்கதை.

இஸ்லாமிய வெறுப்பு பிரசாரம்: இந்த படம் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரப் படமாக உள்ளது. அதனால் அவுரங்கசீப் என்னவெல்லாம் செய்தார் என எடுத்துள்ளார்கள். அது ஒருபுறம் இருந்தாலும், அடுத்த காட்சியிலேயே இந்துக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதையும் எடுத்து வைத்துள்ளார். படத்தில் சமஸ்தானத்து ராஜா மாதிரி ஒருவர் வருகிறார். அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை அடிமைகளாக்கி வைர சுரங்கம் தோண்ட வைக்கிறார். அந்த மக்களுக்கு கூலியாக 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு மூட்டை அரிசி தான் கொடுக்கிறார், அதுவும் ஒரு ஆண்டுக்கு. அந்த அளவுக்கு கொடுமை செய்து வைத்துள்ளார்.
சாதிக்கொடுமை: அந்த மக்கள் எக்காரணம் கொண்டும் அந்த சமஸ்தான ராஜாவை தலை நிமிர்ந்து பார்க்க கூடாது. ராஜாவும் இந்து, அடிமையாக இருக்கும் மக்களும் இந்து. ஆனால் அந்த மக்கள் ராஜாவை நிமிர்ந்து பார்க்க கூடாது. இது எல்லாம் முன்னர் இருந்ததுதான். அதை படத்தில் அப்படியே காட்டியுள்ளார்கள்.
மேல் ஜாதி - கீழ் ஜாதி: அவுரங்கசீப் ஆவது மாற்று மதத்தை சேர்ந்தவர். அவர் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களை கொடுமைப் படுத்தினார் என்பது தவறாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்துக்கள்- மேல் ஜாதி, கீழ் ஜாதி எனக் கூறிக்கொண்டு, இந்துக்களை இந்துக்களே கொடுமை படுத்தும் போது, இந்த மதத்தை விட்டு ஓடினால் போதும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் படத்தை எடுத்து வைத்துள்ளார்கள். அவுரங்கசீப் எவ்வளவோ நல்லவர் என படத்தை எடுத்து வைத்துள்ளார்கள்.

முதல் பாகம் இல்லை முதல் பாதி: இந்த படத்தை பாகம் 1 என எடுத்து வைத்துள்ளார்கள். ஆனால் இது படத்தின் முதல் பாதி. இந்த படத்தின் கிளைமாக்ஸாக கதாநாயகனும் வில்லனும் சந்திப்பதை வைத்துள்ளார்கள். கதாநாயகனும் வில்லனும் சந்திப்பது இடைவேளை காட்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் முதல் பாதியைத்தான் முதல் பாகமாக எடுத்து வைத்துள்ளார்கள். மொக்கை மொக்கையாக கிரீன் மேட் ஷாட்கள் எடுத்து வைத்துள்ளார்கள். இப்படியெல்லாம் படமெடுத்தால் உங்க கூட எல்லாம் வாழ முடியாது நாங்கள் அவுரங்கசீப் பின்னாலே போகிறோம் என மிச்சம் இருப்பவர்களும் சென்றுவிடுவார்கள்" என விமர்சித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











