கொண்டாட்டத்திலும் முறைத்துக் கொண்ட எம்.எஸ். பாஸ்கர்.. ஹரீஷ் கல்யாண்.. வீடியோ டிரெண்டிங்!
சென்னை: 71 வது தேசிய விருதுகள் சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியான பார்க்கிங் படம் மூன்று விருதுகளை வென்றது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இருவரும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என மூன்று விருதுகளை படம் வென்றது. இப்படி இருக்கும்போது படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்போதும் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் என இருவரும் முறைத்துக் கொண்டது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா என பலரும் நடித்தார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.

இந்நிலையில் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மொத்த படக் குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் என இருவருமே கதாநாயகர்கள், இருவருமே வில்லன்கள் எனக் கூறும் அளவுக்கு அவர்களின் நடிப்பு அமைந்தது. ஆனால் படம் கடைசியாக ஹேப்பி எண்டிங்கில் முடிந்தது ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுத்தது.
பார்க்கிங்க்கு தேசிய விருதுகள்: பரபரப்பான திரைக்கதையை தனது அட்டகாசமான எடிட்டிங் மூலம் திரையில் பிரதிபலிக்கச் செய்தவர் எடிட்டர் பிலோமின் ராஜ் தான். அவருக்கும் தேசிய விருது அளித்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கருக்கு தேசியவிருது மிகவும் பொருத்தமாக அளிக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன்னரே பல படங்களுக்காக வென்றிருக்க வேண்டியவர். ஆனால் அவருக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள தேசிய விருது என்பதே மிகவும் காலதாமதமானது தான் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எம்.எஸ். பாஸ்கரும் தேசிய விருது எனக்கு இப்போது கிடைத்ததில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் இதற்கு முன்னரும் எனக்கு கிடைக்காததற்கு நான் வருத்தப்படவில்லை என்று கூறினார்.
செல்ல சண்டை: இந்நிலையில் பார்க்கிங் படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுவிட்டதால், படக்குழு இதை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் எப்படி படத்தில் பாம்பும் கீரியுமாக இருந்தார்களோ அதே போல், கேக் வெட்டும் போதும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு, தாக்குவது போல் விளையாட்டாக செய்தார்கள். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பார்க்கிங் 2: பார்க்கிங் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சில மாதங்களிலேயே பார்க்கிங் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கவுள்ளதாக பேச்சுக்கள் திரைத்துறையில் உலா வந்தது. ஆனால் இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இப்படி இருக்கும்போது, படம் மூன்று தேசிய விருதுகளை வென்று விட்டதால், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











