Parking: 50 நாள் ஆகிடுச்சு.. அந்த வெறித்தனமான சீனுக்கு ஹரிஷ் கல்யாண் எப்படி டப்பிங் பண்றாரு பாருங்க!
சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் எலியும் பூனையாக நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியானது. இந்நிலையில், 50 நாட்கள் அந்த படம் தியேட்டரில் ஓடியதை கொண்டாடும் வகையில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள டப்பிங் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
குறைந்த பட்ஜெட் படங்கள் அதிகம் மக்களை ஈர்க்காத நிலையில், பார்க்கிங் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியான நிலையிலும் இன்னமும் சில தியேட்டர்களில் அந்த படம் ஓடிக் கொண்டிருப்பது படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

தோனி தயாரிப்பில்: கடந்த ஆண்டு தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடித்த எல்ஜிஎம் திரைப்படம் படுதோல்வியை அடைந்தது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஜூலை மாதம் 28ம் தேதி எல்ஜிஎம் திரைப்படம் வெளியானது. லவ் டுடே படம் போல எல்ஜிஎம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் தோனி எந்த படத்தையும் தயாரிக்க முன்வரவில்லை.
அமலா பாலின் முதல் ஹீரோ: அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் நடித்தாலும் அவருக்கு எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுக்கு, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே, ஓ மணப்பெண்ணே என பல படங்களில் நடித்தார். மேலும், டீசல், லப்பர் பந்து உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
எம்.எஸ். பாஸ்கர் vs ஹரிஷ் கல்யாண்: ஒரு பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து படத்தில் வில்லன் என யாருமே இல்லாமல் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கரின் ஈகோவை வில்லனாக்கி இருப்பார் இயக்குநர். ஹரிஷ் கல்யாண், இந்துஜா மேல் வீட்டுக்கு குடிவர கீழ் வீட்டில் இருக்கும் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையே நடக்கும் கொலைவெறி தாக்குதல் கடைசி சீன் வரை தொடர்ந்து கொண்டே சென்று ரசிகர்களை பிரம்மிக்க செய்தது.
கொலவெறி டப்பிங்: பார்க்கிங் படம் வெளியாகி 50 நாட்கள் ஆகி விட்டது என பதிவிட்டுள்ள ஹரிஷ் கல்யாண். அந்தப் படத்தில் பேட் எடுத்துக் கொண்டு எம்.எஸ். பாஸ்கர் காரை சுக்கு நூறாக அடித்து உடைக்கும் காட்சியில் இந்த அடி உன் மேல விழ வேண்டியது. என்னையும் என் மனைவியும் அவ வயித்துல வளரும் குழந்தையும் உன் புருஷன் கொல்லப் பார்த்துருக்கான் என எம்.எஸ். பாஸ்கர் மனைவியிடம் சொல்லும் காட்சிகளுக்கு எல்லாம் எப்படி டப்பிங் பேசினேன் பாருங்கள் என வெறித்தனமான வீடியோவை வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளார்.
மேக்கிங் வீடியோ: மேலும், பார்க்கிங் படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். ஒரு வீடு, ஒரு பார்க்கிங், இரண்டு கார்கள், இரண்டு மனிதர்களின் ஈகோ சண்டையை வைத்து சுவாரஸ்யமாகவும் த்ரில்லிங்காகவும் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என ராம்குமார் பாலகிருஷ்ணன் நிரூபித்துக் காட்டியது சிறப்பு. அவரது அடுத்த படத்திற்கும் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்துக்கும் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











