Vedan: வேடனின் அரசியல்தான் பிரச்னை.. வேடனை அவதூறாக பேசிய RSSவாதி.. தட்டித்தூக்கிய கேரளா போலீஸ்!
கொச்சி: சேர நாட்டைக் கொண்டுள்ள கேரளாவில் ராவணனை தன் பெரும் பாட்டன் என்று கூறிய இளம் கலைஞன் சொல்லிசை பாடகர் வேடன். சிறு வயது முதல் தான் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை மட்டும் பாடலாக மாற்றாமல், தன்னைப் போல் உலகம் முழுவதும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அனைவருக்காகவும் தனது பாடல்களில் வரிகளை அமைத்து பாடக்கூடிய வேடனை மொத்த கேரள இளைஞர் பட்டாளம் கொண்டாடிக் கொண்டு உள்ளது.
ஆனால் வேடனுக்கு எதிராகவும் கேரளாவில் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கிறது என்றால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவினரிடையே இருந்துதான். இப்படியான நிலையில் வேடனை மிகவும் கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரியின் தலைமை ஆசிரியர் மது கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தற்போது கேரளாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

சொல்லிசை கலைஞன் வேடன்: வேடன் இலங்கைத் தமிழர் அம்மாவுக்கும் கேரள தலித் அப்பாவுக்கும் பிறந்தவர். வேடன் வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். தனது சிறு வயதில் இருந்தே பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்த வேடன், கடந்த 2020ஆம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ் என்ற ஆல்பத்தை வெளியிட்டார். அந்த ஆல்பம் கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வேடன் அதன் பின்னர் தனது பாடல்களை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றம் செய்தார்.வேடனின் தாயார் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் என்பதாலும், அப்பா கேரளாவைச் சேர்ந்த தலித் என்பதாலும், வேடனுக்கு கேரளாவைக் கடந்து, இலங்கை, தமிழ்நாடு, இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் குடிபெயர்ந்த தமிழர்கள் என பலரதப்பில் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது.
பாஜக - ஆர்.எஸ்.எஸ்: மேலும் வேடன் தனது பாடல்களை மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழிலும் உருவாக்கி பாடி வருகிறார். திரும்பும் திசையெல்லாம் செண்டை மேளம் ஒலித்துக் கொண்டு இருந்த கேரளாவில் பறை கொண்டு தனது பாடல்களை அரங்கேற்றம் செய்த ஒரு புரட்சிக் கலைஞன் வேடன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக கருத்துக்களை, சித்தாந்தத்தை மற்றும் பிரதமர் மோடியை தனது பாடல்களில் விமர்சித்து வருகிறார். இதனால் அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகள் வந்து கொண்டே உள்ளன. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரி பத்திரிகையின் ஆசிரியர் மது, கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வேடன் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

ஆர்.எஸ்.எஸ் வாதி கைது: குறிப்பாக, " வேடன் என்ற கலைஞர் பிரச்னை கிடையாது. அவர் தனது கலை மூலம் பேசும் சித்தாந்தமும் அதன் அரசியலும் தான் பிரச்னை. அவருக்குப் பின்னால் பிரிவினைவாதிகள் இருக்கிறார்கள். வேடன் தனது இசை அரங்கேற்றத்தில் பாலஸ்தீன் கொடியை போர்த்திக் கொண்டு பாடுகிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பேசியிருந்தார்.இதனால் கேசரி பத்திரிகையின் ஆசிரியர் மது மீது, கேரளாவின் கல்லடா பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலாயுதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர், மது கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து மது ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வேடனை கடுமையாக விமர்சித்த மது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருப்பது தற்போது கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











