சாமானியர்களின் இசை சந்தோஷம் 'சநா'.. குவிகிறது வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDSanthoshNarayanan
சென்னை: பா. ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமோ என கேட்டு வெகுஜன ரசிகர்களை தனது மாயவிசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மே மாதம் முழுவதும் பிரபலங்கள் பிறந்த மாதமாகவே இந்த கொரோனா காலத்திலும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து செல்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HBDSanthoshNarayanan என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆத்மார்த்தமான இசை
புதிய புதிய இசைக் கருவிகளையும், சப்தங்களையும் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கொடுத்து மிரட்டும் திறன் கொண்டவர் சந்தோஷ் நாராயணன். ஆத்மார்த்தமான இசையை கொடுப்பதில், சந்தோஷ் நாராயணனுக்கு நிகர் அவர் மட்டுமே என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர்ஸ்டாருக்கு
இயக்குநர் பா. ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் அறிமுகமான சந்தோஷ் நாராயணன், ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி மற்றும் காலா படங்களுக்கு வேற லெவலில் இசையமைத்து இந்தியளவில் பிரபலமானார். "நெருப்புடா", "மாயநதி", "கண்ணம்மா" என நடிகர் ரஜினிக்கும் தனது வெரைட்டி விளையாட்டை காட்டியிருப்பார்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் பிறந்தநாளை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள். விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் "யார்ரா யார்ரா இவன் பேரை கேட்டா தெறிக்கும்" என படுமாஸான பாடலை போட்டு இருப்பார். மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் அட்டகாசமான "பொழக்கட்டும் பற" பாடலை பாடியுள்ளார்.

பெண்குயினுக்கு வெயிட்டிங்
பைரவா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு "மஞ்சள் மேகம்" என்ற அழகான ரொமாண்டிக் பாடலை கொடுத்துள்ள சந்தோஷ் நாராயணன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகவுள்ள பெண்குயின் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். பெண்குயின் படத்தின் ரிலீசுக்கும், அதன் பாடல்களை கேட்கவும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வெயிட்டிங்.

நெருப்பு மாதிரி
கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி மற்றும் தனுஷின் வடசென்னை என பல மெகா பிளாக்பஸ்டர் படங்களுக்கு தரமான இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையில், அந்த படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் நெருப்பு மாதிரி ஹிட் ஆனது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சூதுகவ்வும் பிஜிஎம்
விஜய்சேதுபதியின் பீட்சா, சூது கவ்வும், காதலும் கடந்து போகும், இறைவி என பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். "காசு, பணம், துட்டு, மணி மணி" என சூப்பரான பாடல் போட்டு இருந்தாலும், சூது கவ்வும் படத்தில் தாஸ் என்ட்ரிக்கு வரும் பிஜிஎம் சந்தோஷ் சிவன் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











