மலையாள இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பிரபல மலையாள இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த முரடன் உள்ளிட்ட பல்வேறு மலையாளப் படங்களை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் தற்போது சென்னை கே.கே.நகரில் வசிக்கிறார்.
இவர் மீது, சென்னையைச் சேர்ந்த பள்ளிக்கூட முதல்வர் அனுராதா ரவி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த புகார் மனுவில், "சென்னையை அடுத்த போரூர் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலத்தை தன்னிடம் விற்பனை செய்துவிட்டு, அதே நிலத்தை மற்ற சிலரிடமும் விற்பனை செய்து மோசடி செய்துள்ளார்", என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.மதிவாணன் விசாரித்தார். போலீஸ் விசாரணை தொடர்ந்து நடப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


Click it and Unblock the Notifications











