அவர் வந்து பிரசாரம் செய்து ஜெயிக்கனும்னு அவசியமில்லை.. கடுப்பான கருணாஸ்.. யாரை சொல்றாரு?
சிவகங்கை: நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய நகைச்சுவை மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகர்களின் ஒருவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான போகும் இடம் வெகு தூரமில்லை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கருணாஸ் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் கருணாஸ் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இது தொடர்பாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கருணாஸ் செய்தியாளர்களை சந்திக்கையில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவரது மகன் கென் கருணாஸ் பிரசாரத்திற்கு வருவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எனது மகன் வந்து பிரச்சாரம் செய்து தான் நான் ஜெயிக்க வேண்டும் என்று இல்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலை சிறந்த திட்டங்கள் போதும், குறிப்பாக அவர் நடைமுறைப்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்துறை திட்டம் என்ற ஒரு திட்டமே சிவகங்கை தொகுதியில் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வைக்கும் என்று கூறினார்.

கருணாஸ் மகன்: கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த மார்ச் 19ஆம் தேதி அவர் எழுதி இயக்கி நடித்த யூத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. ரூபாய் 50 கோடிக்கு மேல் படம் வசூல் செய்துள்ளதால் கென் கருணாஸின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் யூத் படத்தின் மொத்த குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
யூத்: யூத் படத்தின் டைட்டில் என்பது ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படத்தின் டைட்டில். அப்படி இருக்கையில் இது தொடர்பாக யூத் படத்தை அனுப்பிய போது அவர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சரி என்று கூறிவிட்டனர் என்று கென் கருணாஸ் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் கருணாஸ் நடிகர் விஜயை அரசியல் ரீதியாக காட்டமாக விமர்சித்து வரும் நிலையில் அவரது மகனுக்கு யூத் பட டைட்டில் வைக்க யூத் படக் குழுவினர் எந்தவிதமான தடையும் விதிக்காமல் ஒப்புதல் அளித்ததே பலராலும் பாராட்டப்பட்டது.

அரசியல் வாழ்க்கை: கருணாஸைப் பொறுத்த வரையில் சினிமாவில் நடித்துக் கொண்டு அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் கருணாஸ் திமுக கூட்டணியில் இணைந்து பயணிக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்படி இருக்கையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் கருணாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் சிவகங்கை தொகுதியில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.


Click it and Unblock the Notifications










