நடிகைகள் குறித்து கண்டபடி பேசிய பிரபலம்.. புகார் கொடுத்த நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர்
சென்னை: ஹேமா கமிட்டி விவகாரம் மலையாள சினிமா மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்களை ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தால் கூட, ஊடகங்கள் அவர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் தொடங்கி பல நடிகர்கள் இது தொடர்பாக நேரடி பதில் அளிக்காமல் நழுவி வந்தனர். இந்நிலையில் பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்தனர். இப்படியான நிலையில், பிரபல மருத்துவர் காந்த ராஜ் நடிகைகள் குறித்து பல அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷயம் ஹேமா கமிட்டி விவகாரம்தான். இதனால் மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் தலைவராக இருந்த மோகன்லால் தனது பதவியை தானாக முன்வந்து கலைத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அளித்த விசாரணை அறிக்கை வெளிவராமல் இருந்தது. இறுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை தற்போது வெளியே வந்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் முகத்திரை கிழிந்துள்ளது எனக் கூறும் அளவிற்கு, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி விவகாரம், தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழிலும் பல முன்னணி நடிகைகள் தொடங்கி, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, பேசி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், அண்மையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களிடம் யாரும் பகிர வேண்டாம் என்பது போன்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

காந்தராஜ்: இப்படியான நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமா உலகம் குறித்து பல்வேறு தகவல்களைக் கூறி வருபவரும், மருத்துவருமான காந்தராஜ் அண்மையில் அளித்த பேட்டியில் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, "தற்போது அட்ஜெஸ்மெண்ட் குறித்து பலரும் பேசி வருகின்றார்கள். அட்ஜெஸ்மெண்ட் என்பது, பாலியல் பலாத்காரம் கிடையாது. ஒருவருடன் உடலுறவு கொள்ள மற்றொருவர் ஆசைப்படுகின்றார் என்றால், அது எப்படி நடக்கும், அதற்கு அவரிடம் கேட்டால்தானே நடக்கும். அப்படியானால், அட்ஜெஸ்மெண்ட் என்பது, இருவருக்கும் சம்மதத்துடன் நடப்பது. ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் நோ சொல்லிவிட்டால், அங்கேயே அந்த விஷயம் முடிந்துவிடும்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமா நடிகைகளுக்கு நடந்தது அதேதான். ஆனால் அன்றைக்கு அமைதியாக இருந்துவிட்டு, இன்றைக்கு, என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் எனக் கூறுவது எந்த அளவிற்கு சரி எனத் தெரியவில்லை. சினிமாவைப் பொறுத்தவரையில் கேமரா மேன், கதாநாயகன், எடிட்டர், இயக்குநர் என பலரிடம் ஒரு நடிகை அட்ஜெஸ்ட் செய்து போகவேண்டிய சூழலை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கிவிட்டார்கள். கேமராமேனிடம் அட்ஜெஸ்ட் செய்து போகவில்லை என்றால், உங்களை வேறு கோணத்தில் காட்டிவிடுவார். எடிட்டரிடம் அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால், நீங்கள் இருக்கும் காட்சிகளை அவர் வெட்டிவிடுவார், இயக்குநர் மற்றும் கதாநாயகனிடம் ஒத்துழைக்கவில்லை என்றால் அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது" என பேசியிருந்தார்.

புகார்: இதுமட்டும் இல்லமால் பல சர்ச்சையான கருத்துக்களையும் பேசியிருந்தார். அந்தப் பேட்டியில் மருத்துவர் காந்தராஜ் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி, மருத்துவர் காந்த ராஜ் மீது சென்னை காவல் துறையினரிடம், ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அதில் நடிகைகள் குறித்து அவதூறான மற்றும் உண்மைக்கு மாறான ஆதாரமற்ற கருத்துக்களை காந்தராஜ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











