வட சென்னையில் இந்தியில் பேசி ஓட்டுக் கேட்ட ஹேமமாலினி!

சட்டமன்ற தேர்தல் 13-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பா.ஜ.க.அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார்.
இந்தியில் பேசி ஓட்டுக் கேட்டார்
இந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் எம்.ஜெய்சங்கரை ஆதரித்து, சௌகார்பேட்டை பகுதி முழுவதும் இந்தி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி திறந்த ஜீப் காரில் வீதி வீதியாகச்சென்று பிரசாரம் செய்தார்.
துறைமுகம் தொகுதியில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கும் சௌகார்பேட்டை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தங்கசாலை தெரு, ஆதியப்ப நாயக்கன் தெரு, நாராயண முதலி தெரு என பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் ஜெய்சங்கருடன் திறந்த ஜீப் காரில் வீதி வீதியாகச் சென்று ஹேமமாலினி ஓட்டுக்கேட்டார்.
தங்கசாலைத் தெரு சந்திப்பில் பகல் 12 மணிக்கு, உச்சிவெயிலில் ஹேமமாலினி தனது பிரசாரத்தைத் தொடங்கினார். முதலில் இந்தியில் தனது பேச்சைத் தொடங்கினார். இடையில் நிறுத்தி, தமிழில் பேசவா என்று ஹேமமாலினி கேட்டார்.
அதற்கு இந்தியிலேயே பேசுமாறு மக்கள் மத்தியில் இருந்து குரல் வந்தது. இந்தப் பகுதியில் உள்ள மார்வாடிகள் அனைவருக்குமே நன்கு தமிழ் தெரியும். என்றாலும் அவர்களின் மொழிப் பாசம் அப்படி என்பதால் சௌகார்பேட்டை பகுதி முழுவதும் இந்தியிலேயே பேசி, பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டார் ஹேமமாலினி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஹேமமாலினி என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுகம் தொகுதியில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, கழிவுநீர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை தனது பேச்சில் குறிப்பிட்டு, இந்த குறைகளைப் போக்குவதற்கு, பா.ஜ.க.வேட்பாளர் ஜெய்சங்கருக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











