ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட டீசர் எப்போ வருது தெரியுமா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தின் டீசர் எப்போது ரிலீஸாகும் என்ற தகவல் கோலிவுட்டில் பரவிவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முருகதாஸ்.
அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநராக அறிமுகமான அந்தப் படம் அஜித்தின் கரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்தப் படத்திலிருந்துதான் அஜித்துக்கு தல என்ற பட்டமும் கிடைத்தது. கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்தப் படத்தில் பிரசாந்த்தான் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்த்த முருகதாஸ்: முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசிரியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் விஜயகாந்த்தை வேறு ஒரு பரிமாணத்தில் காண்பித்திருந்தார் முருகதாஸ்.
கோலிவுட் டூ பாலிவுட்: அதனையடுத்து அவர் இயக்கிய கஜினி திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. சூர்யாவின் கரியரிலும் அந்தப் படம் முக்கியமானதாக அமைந்தது. கஜினி இங்கு பெரிய வெற்றியை பெற்ற பிறகு பாலிவுட்டிலும் அந்தப் படம் ரீமேக்கானது. அந்தப் படத்தையும் முருகதாஸே இயக்கினார். தமிழில் ஹிட்டானது போல் பல மடங்கு ஹிந்தியில் ஹிட்டானது. இதன் காரணமாக இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் அவர். அதனையடுத்து விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கினார். அவைகளும் மெகா ஹிட்டாக அமைந்தன.
சறுக்கிய முருகதாஸ்: இப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த முருகதாஸுக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டது. முக்கியமாக கதை திருட்டு பிரச்னையிலும் அவர் சிக்கினார். அதிலும் சர்கார் பட விவகாரம் பெரிய விவாதத்தை கிளப்பியது. தொடர்ந்து ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார், மகேஷ் பாபுவை வைத்து இயக்கிய ஸ்பைடர் ஆகிய படங்களும் தோல்வியையே சந்தித்தன. சூழல் இப்படி இருக்க எப்படியாவது தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க கமிட்டானார்.
எப்போது டீசர்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. எஸ்கேவின் படத்தை முடித்துவிட்டு சல்மான் கான், ராஷ்மிகா மந்தனாவை வைத்து ஹிந்தியில் ஒரு படத்தை முருகதாஸ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











