தனுஷின் இட்லி கடை.. ஆடியோ வெளியீட்டு விழா எப்போது?.. வெளியான புதிய தகவல்
சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது. அதேசமயம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. குபேராவுக்கு முன்னதாகவே தானே இயக்கி இட்லி கடை படத்தில் நடித்திருந்தார். படத்தின் ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போன சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக குபேரா திரைப்படத்தில் நடித்திருந்தார். சேகர் கம்முல்லா இயக்கத்தில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். முதன்முறையாக சேகருடன் தனுஷ் இணைந்திருந்ததால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் பன்மடங்கு இருந்தது.
சுமார்தான்: அந்த எதிர்பார்ப்போடு தமிழ், தெலுங்கில் படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். படக்குழு எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாட்டில் இப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனால் தெலுங்கிலோ சக்கைப்போடு போட்டது. தமிழ்நாட்டில் படம் பெரிய வெற்றி பெறாதது தனக்கு வருத்தத்தை கொடுத்ததாக இயக்குநர் சேகர் கம்முல்லாவும் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி படம்: குபேரா படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதில் அவருக்கு ஜோடியக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. அதனையொட்டி படக்குழு சில நாட்களுக்கு முன்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் தனுஷ், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகவும் செய்தன.
இட்லி கடை: இதற்கிடையே ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் இட்லி கடை படத்தையும் இயக்கினார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். அருண் விஜய் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். முதலில் இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதாக இருந்தார்கள். ஆனால் அந்த மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வந்ததன் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
எப்போது ஆடியோ வெளியீட்டு விழா?: படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்னும் சில மாதங்களில் பிரமாண்டமாக நடத்தவும்; படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அநேகமாக சிவகார்த்திகேயனின் மதராஸியும் இந்தப் படமும் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











