மெகா ஹிட்டான RDX.. தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் இதுவா?.. செம மாஸா இருக்குமே
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகுக்கு கடந்த சில வருடங்களாகவே பொற்காலம்தான். அங்கிருந்து வரும் படங்கள் அனைத்துமே இந்திய அளவில் கவனம் ஈர்த்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டாகிக்கொண்டிருக்கின்றன. அப்படி வெளியான படங்களில் மின்னல் முரளி, RDX ஆகிய இரண்டு படங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மின்னல் முரளி சூப்பர் ஹீரோ ஜானரிலும், RDX ஆக்ஷன் ஜானரிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டன. இந்தச் சூழலில் அந்த இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனத்துடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கேரள திரையுலகத்தை பார்த்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருந்து வரும் படங்களின் லைன் சிம்பிளாக இருந்தாலும் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் மிரட்டலாக பிரசெண்ட் செய்கிறார்கள். இதன் காரணமாக மலையாள சினிமாக்கள் போல் எடுக்க வேண்டும் என்று பிற மொழி திரையுலகினரும் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

வரிசையாக ஹிட்டுகள்: கடந்த சில வருடங்களாகவே கேரள சினிமாக்கள் தொடர்ந்து ஹிட்டடித்துக்கொண்டிருக்கின்றன. மஞ்சும்மெல் பாய்ஸ், இலவீழா பூஞ்சிறா, பிரேமலு என ஏகப்பட்ட படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அந்தப் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படி ஹிட்டடித்த படங்களில் மின்னல் முரளி, RDX படங்களும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னல் முரளி, RDX: மின்னல் முரளி திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தை பாசில் ஜோசப் இயக்க மானுவல் குரூஸ் டார்வினின் டி குரூப் நிறுவனம் தயாரித்திருந்தது. டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்திருந்தார். சூப்பர் ஹீரோ ஜானரில் வெளியான அந்தப் படம் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும் விதத்தில் இருந்ததால் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக டோவினோ தாமஸின் புகழ் மேற்கொண்டு உயரவும் செய்தது.
அதேபோல் கடந்த வருடம் வெளியான படம் RDX. இந்தப் படத்தையும் மானுவல் குரூஸ் தயாரிக்க; நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருந்தார். ஷனே நிஹாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்திருந்தார். வழக்கமான ஆக்ஷன் ஜானரில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும் மேக்கிங்கில் பட்டையை கிளப்பியது. முக்கியமாக சண்டை காட்சிகளில் எல்லாம் அனல் பறந்தன. அதன் காரணமாக இந்தப் படமும் மெகா ஹிட்டானது. இப்படி இரண்டு மெகா ஹிட் படங்களை தயாரித்ததால் கேரள திரையுலகில் தயாரிப்பாளர் மானுவல் குரூஸ் கவனிக்கப்படுபவராக மாறியிருக்கிறார்.
அடுத்த படம்: இந்நிலையில் அவர் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்துக்கு 'App Kaise Ho'என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வினீத் ஜோஸ் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் தியான் ஸ்ரீனிவாசனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு டான் வின்சென்ட் இசையமைக்க, ஆனந்த் மதுசூதனன் பின்னணி இசையமைத்துள்ளார். அம்ஜத் மற்றும் மானுவல் குரூஸ் டார்வின் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
முன்னதாக, நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவின் ஃப்ரைடே பிலிம் ஹவுஸுடன் இணைந்து மானுவல் குரூஸ் டார்வினின் டி குரூப் புதிய முயற்சியைத் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 'The Friday Tickets' என்று பெயரிடப்பட்டு அந்த நிறுவனத்தின் மூலம் துபாயில் படங்களை விநியோகம் செய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











