தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எப்படி இருக்கு?.. முதல் விமர்சனம் இதோ
சென்னை: தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இதில் தனுஷின் உறவினர் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து வெளியாகியிருக்கும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கும் சூழலில் படத்தின் முதல் விமர்சனம் தற்போது தெரியவந்திருக்கிறது.
தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருப்பவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும் வென்றிருக்கும் அவர் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. தோல்வியடைந்தது மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் அந்தப் படம் உள்ளானது. கடைசியாக தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம்தான் ஹிட்டாக அமைந்தது. அடுத்ததாக எதுவும் ஹிட் இல்லை.

குபேரா: அவர் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்கிற முழு மூச்சில் படக்குழுவினர் உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இயக்குநர் தனுஷ்: நடிகராக மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது உள்ளிட்ட ப்ளாட்பார்ம்களிலும் தனுஷ் ஃபுல் ஃபார்மோடுதான் இருக்கிறார். அவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். வயதானவர்களுக்கு இடையே வரும் காதலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து இயக்கிய ராயன் படம்தான் சறுக்கிவிட்டது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: சூழல் இப்படி இருக்க தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தனுஷின் உறவினர் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முதலில் படமானது பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸாவதால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் விமர்சனம்: நிச்சயம் இந்தப் படம் தனுஷின் இயக்கத்தில் தனி முத்திரை பதிக்கும் என்று அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பாடல்கள் எல்லாம் மிக அருமையாக வந்திருக்கின்றன. இந்நிலையில் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் இந்தப் படம் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது. ஃபீல் குட் படமாக வந்திருக்கிறது. நிச்சயம் ப்ளாக் பஸ்டர் ஆகும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையே தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தை ஆகாஷ்தான் தயாரிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











