விக்ரமின் வீர தீர சூரன் எப்படி இருக்கு?.. இதோ முதல் விமர்சனம்.. பிரபலம் என்ன சொல்லிருக்காரு பாருங்க!
சென்னை: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதில் அவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சமுடு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசரும், ட்ரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே கண்டிப்பாக படமும் மெகா ஹிட்டாகும் என்று விக்ரமின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் படம் பார்த்த தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த தங்கலான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானாலும் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. படத்தின் கதை நல்ல விதமாக அமைந்திருந்தாலும் இரஞ்சித்தின் மேக்கிங் பல ரசிகர்களுக்கு புரியவில்லை; அதனால்தான் படம் பெரிய ஹிட்டை அடையவில்லை என்றே கருத்துக்கள் நிலவின. அதேசமயம் விக்ரமின் நடிப்புக்கு ஃபேன்ஸும், திரை ஆர்வலர்களும் வழக்கம்போல் தங்களது பலத்த வரவேற்பை கொடுத்தார்கள்.
ஹிட் தேவை விக்ரமுக்கு: சியான் விக்ரம் கடைசியாக பெரிய கமர்ஷியல் ஹிட்டை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ஓரளவுக்கு ஹிட்டானாலும் அதில் பல ஹீரோக்கள் நடித்திருந்ததால் சோலோ ஹிட் கணக்கில் விக்ரமுக்கு சேராது. எனவே எப்படியாவது ஒரு படத்தை கமர்ஷியல் ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் விக்ரமும், அவரது ரசிகர்களும் ஆறாத வேட்கையுடன் இருக்கிறார்கள்.
வீர தீர சூரன்: இப்படிப்பட்ட சூழலில்தான் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கும் அருண்குமாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் விக்ரம். அருண் இயக்கிய மூன்று படங்களுமே பலத்த வரவேற்பை பெற்றன. அதிலும் சேதுபதி கமர்ஷியல் ரீதியாகவும், சித்தா விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே விக்ரமை வைத்து அவர் இயக்கியிருக்கும் வீர தீர சூரன் கண்டிப்பாக க்ளாஸ் ப்ளஸ் மாஸாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படமானது மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். சுராஜுக்கு இதுதான் தமிழில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அவருக்கு அருமையான ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே கருதப்படுகிறது. அவரும் பேட்டிகளிலும், ஆடியோ லான்ச்சிலும் தனது பேச்சில் அதகளப்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டையை கிளப்பிய சுராஜ்: சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய சுராஜ், 'எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைகள் பிறந்தபோதும் ஒரு விருது கிடைத்தது. எனவே நான்காவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இதுகுறித்து எனது மனைவியிடம் கேட்கப்போகிறேன்' என்று கூறி பட்டாசை பற்ற வைத்தார். இதற்கிடையே படத்துடைய ட்ரெய்லரும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
முதல் விமர்சனம்: ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விக்ரமுக்கு இது இன்னொரு தூள் படமாக அமையும் என்று நம்பியிருக்கின்றனர். இந்நிலையில் படம் பார்த்த தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில், 'எஸ்.யு. அருண்குமாரின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது புரோமோஷனுக்காக போடப்பட்ட போஸ்ட் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











