அமீர் கானை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. இதுதான் கதையா?.. ஃபுல் ஃபார்ம்ல இருக்காரே
சென்னை: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குநராக இருக்கிறார். அவரது கடைசி படமான லியோ சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கும் நிலையில் அடுத்ததாக அமீர் கானை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் இணையும் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் அதில் நல்ல பெயரை பெற்றார். தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய கைதி அவரை ஹிட் இயக்குநராக மாற்றியது. தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களுமே ஹிட் என்றாலும்; விக்ரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அப்படத்திலிருந்து லோகேஷின் மார்க்கெட் உச்சம் சென்றது.
லியோ லோகேஷ்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.

கூலி லோகேஷ் கனகராஜ்: இப்போது அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனத்துக்கும், ட்ரோலுக்கும் கூலி படத்தில் பதிலடி கொடுக்க அவர் தயாராக இருக்கிறார் என்று திரைத்துறையினர் கூறிவருகிறார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக லோகேஷுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் இப்படம் ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இரும்புக்கை மாயாவி: இதற்கிடையே மாநகரம் திரைப்படத்தை இயக்கி முடித்தவுடனேயே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க தன்னிடம் அனுபவம் போதாது என்று எண்ணி; அதனை தள்ளி வைத்தார். சூழல் இப்படி இருக்க கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அமீர் கானிடம் அவர் ஒரு கதை சொன்னதாகவும்; அமீரும் நடிக்க ஒத்துக்கொண்டார் என்றும் பேசப்பட்டது.
என்ன கதை?: ஆனால் அமீர் கானிடம் சொல்லப்பட்டது இரும்புக்கை மாயாவி திரைப்பட கதை இல்லை. ஏற்கனவே லோகி எழுதியிருந்த ஒரு சூப்பர் ஹீரோ கதையைத்தான் சொன்னார். அந்தக் கதையைத்தான் அமீர் கான் ஓகே சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள், நல்லவேளை இரும்புக்கை மாயாவி படமும் சூர்யாவின் கையை விட்டு போகாமல் இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைய ஆரம்பித்திருக்கிறார்கள்.
லோகேஷை பொறுத்தவரை கூலியை முடித்த பிறகு கூலி 2, ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்கவிருக்கிறார். அநேகமாக ரோலக்ஸ் படத்துக்கு பதிலாக சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் படங்களை முடித்துவிட்டு அமீர் கானுடனான படத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











