விடுமுறை நாளிலும் திணறிய இந்தியன் 2..சேனாபதி தாத்தாவுக்கு இப்படி சோதனையா?.. வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த கமல் ஹாசனுக்கு விக்ரம் படம் கம்பேக்காக அமைந்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. எனவே அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வரிசையாக ஹி படங்களை கொடுத்தவர். அந்தவகையில் அவர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் இந்தியன் அமைந்தது.

கல்ட் க்ளாசிக்: அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்” என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கும். இப்படி எல்லா ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது.
இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க திட்டமிடப்பட்டது. அட இந்தியன் 2வா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கண்டிப்பாக இந்தியன் படத்தின் முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் இருக்கும் என்று ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள்.
கலவையான விமர்சனம்: ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக இந்தியன் 2 இருந்தது. மேக்கிங்கோ, வசனமோ, இசையோ எதுவுமே ஈர்க்கவில்லை. இந்தியன் எப்படிப்பட்ட படம்; அதற்கு இரண்டாவது பாகம் எடுக்கிறேன் என்கிற பெயரில் எதையோ எடுத்து வைத்திருக்கிறார்களே என்று ஓபனாகவே ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். இதன் காரணமாக படக்குழு பெரும் அப்செட் ஆனது. மேலும் படத்தை எபப்டியாவது தப்பிக்க வைக்க வேண்டுமென்பதற்காக 20 நிமிடங்கள் ட்ரிம்மும் செய்யப்பட்டது.
வசூலில் டல்: இப்படி விமர்சன ரீதியாக அடிவாங்கிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 வசூல் ரீதியாகவும் பெரிதாக சோபிக்கவில்லை. படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மொத்தம் 25 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டது. அது கமல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இரண்டாவது நாளிலோ வெறும் 18 கோடி ரூபாய்தான் வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் இரண்டு நாட்கள் பெரும் அடியை வாங்கினாலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சரிவில் இந்தியன் 2: ஆனால் நேற்றைய வசூலின் நிலைமையோ இன்னும் மோசமாக போய்விட்டதாக கூறுகிறார்கள். அதாவது தமிழில் 11 கோடி ரூபாய், ஹிந்தியில் ஒன்றரை கோடி ரூபாய், தெலுங்கில் 2.8 கோடி ரூபாய் என நேற்று மொத்தமே 15 கோடி ரூபாய்தான் வசூல் செய்திருக்கிறதாம். இதனால் படக்குழு மேற்கொண்டு அப்செட். ஆகமொத்தம் மூன்று நாட்களில் 58 கோடி ரூபாயை இந்தியன் 2 வசூலித்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











