ஓஹோ இந்தியன் 2 கதை இதுதானா?.. சமூக வலைதளங்களில் லீக்கான விஷயம்
சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார்.
இந்தியன் 2: இதற்கிடையே அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க கமிட்டானார். சில வருடங்களுக்கு முன்பே தொடங்கிய ஷூட்டிங் விபத்து காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. பிறகு விக்ரமின் வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்தார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கண்டிப்பாக இந்தப் படத்தின் முதல் பாகம் எப்படி மெகா ஹிட் ஆனதோ அதேபோல் இந்த பாகமும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.
முதல் பாடல்: இந்தியன் 2 படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான பாரா கடந்த 22ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பாடலை கவிஞர் பா.விஜய் எழுதியிருக்கிறார். வரிகளை கேட்ட ரசிகர்கள் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் சிறந்த வரிகளை கேட்டதுபோல் இருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.
படத்தின் கதை: இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நாட்டில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள் உள்ளிட்டவைகளை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவராக சித்தார்த் இருப்பார். அதனால் அவருக்கு வரும் இன்னல்களிலிருந்து காப்பாற்ற இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார். அடன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











