Jailer Box Office: தலைவரு நிரந்தரம்.. முதல் நாளிலேயே ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கிய ஜெயிலர் முதல் நாள் வசூல்
சென்னை: Jailer Box Office (ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ்) உலக அளவில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர். நெல்சான் திலீப்குமார் இயக்கத்தில் படமானது உருவாகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் தோல்வியடைந்ததால் ரொம்பவே துவண்டிருந்த அவரது ரசிகர்கள். இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினி இணைந்திருக்கும் ஜெயிலர் படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.

ஜெயிலர் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படம் நேற்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் 900 ஸ்க்ரீன்களிலும், உலக அளவில் 4000 ஸ்க்ரீன்களிலும் படம் திரையிடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ரிலீஸானதால் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடினார்கள் ரசிகர்கள். 9 மணி காட்சியை பார்த்துவிட ரசிகர்கள் படையெடுத்ததால் கூட்டம் அலைமோதியது.
பாசிட்டிவ் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் திருப்தி அடைந்திருக்கின்றனர். முதல் பாதியின் பெரும்பாலான நேரம் ஸ்லோவாக போனாலும் ஒரு பாயிண்ட்டுக்கு மேல் படம் சட்டென்று பிக்கப் ஆகிவிடுகிறது. ரஜினிகாந்த்தை மாஸாகவும், க்ளாஸாகவும் நெல்சன் திலீப்குமார் காட்சிப்படுத்தியிருக்கிறார். மாஸ் காட்சிகளுக்கு எல்லாம் கொஞ்சமும் குறைவில்லை என ரசிகர்கள் ஏகத்துக்கும் புகழ்ந்துவருகின்றனர்.
அனிருத்: அதேபோல் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமாருக்கு அடுத்ததாக அனிருத்தையும் பலரும் பாராட்டிவருகின்றனர். எல்லோருக்குமே சிறப்பாக பிஜிஎம் போடும் அனிருத் ரஜினிக்கு மட்டும் கூடுதல் ஸ்பெஷலாக போட்டிருக்கிறார் என்கின்றனர். மேலும் படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சியிலும், வில்லன் விஷயத்திலும் நெல்சன் திலீப்குமாரின் மேக்கிங்கும், ட்விஸ்ட்டும் சூப்பராக இருக்கிறது. அதற்கேற்றப்டி அனி இசையை கொடுத்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
பாக்ஸ் ஆஃபிஸ்: முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததன் காரணமாக வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் முதல் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தியாவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தம் 49 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தமிழ்நாட்டில் 23 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 11 கோடி ரூபாயும், கேரளாவில் 5 கோடி ரூபாயும், ஆந்திரபிரதேசம் - தெலங்கானாவில் 10 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது மற்ற எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்றும் கருதப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தலைவரு நிரந்தரம் என மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
இதற்கு முன்னதாக அஜித் நடித்த துணிவு படம் ரிலீஸான முதல் நாளில் 22 கோடி ரூபாயையும், வாரிசு படம் 19 கோடி ரூபாயையும் வசூலித்திருந்தது. அந்த ரெக்கார்டை ஜெயிலர் படம் முறியடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











