Lal Salaam Box Office - படுத்தே விட்டாரய்யா.. லால் சலாம்.. 4ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களை லால் சலாம் திருப்திப்படுத்தவில்லை. இதனால் வசூலிலும் பலத்த அடி வாங்கியிருக்கிறது. இந்தச் சூழலில் நான்காவது நாளான நேற்று லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் எடுத்த வை ராஜா வை படமும் எடுபடவில்லை. சூழல் இப்படி இருக்க சில வருடங்கள் சினிமா எடுப்பதிலிருந்து கேப் விட்ட ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் லீடு ரோலில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

படம் ரிலீஸ்: ஐஸ்வர்யா இயக்கிய முதல் இரண்டு படங்களும் சரியாக போகாததால் கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது. அதற்கு மேலும் பலம் சேர்க்க ரஜினிகாந்த்தும் தயாராக இருந்தார். அதனாலேயே அவர் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியதாகவும் திரைத்துறையில் பேச்சு எழுந்தது. ரஜினியும் கை கொடுத்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஐஸ்வர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்போடு கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
மோசமான விமர்சனம்: ரஜினிகாந்த் நடித்திருப்பதால் படத்தை பார்க்க முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு குறிப்பிடும்படி சென்றது. அப்படி சென்ற ரசிகர்களுக்கு படம் சரியான திருப்தியை தரவில்லை. கிரிக்கெட்டையும், மதத்தையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்த ரசிகர்கள்; மேக்கிங்கும் வரவில்லை, திரைக்கதையும் வரவில்லை. எப்படி லைகா நிறுவனம் ஐஸ்வர்யாவை நம்பி பணத்தை போட்டது என்று சமூக வலைதளங்களில் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர்.
என்ன பண்ணி வெச்சிருக்கீங்க தலைவர?: அதேபோல் ரஜினிகாந்த்தின் நடிப்பும் சரியாக இல்லை; அவருக்கான மாஸ் சீன்கள் எல்லாம் படு திராபையாக இருந்ததாகவும் கூறும் ரசிகர்கள்; படத்தில் ஒரு காட்சியின்போது அவர் அழுகும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து எங்க தலைவர என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடிப்பது போன்ற ஆபத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்: இப்படி விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியிருக்கும் லால் சலாம் படம் விமர்சன ரீதியாவது படக்குழுவுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் என்று எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் வசூலிலும் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. அதன்படி படம் வெளியான முதல் நாள் 3.55 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. அதுவே படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சிதான். அதனையடுத்து இரண்டாவது நாளில் 3.25 கோடி ரூபாய் வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
படுத்தே விட்டாரய்யா?: முதல் இரண்டு நாட்களின் நிலைமை மோசமடைய மூன்றாவது நாளின் நிலைமையோ அதைவிட கீழே சென்றது. அதன்படி மூன்றாவது 3 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வார இறுதி நாட்களிலேயே ஒழுங்காக வசூல் இல்லாததால் வாரத்தின் வேலை நாளான திங்கட்கிழமை படத்தின் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சம் இருந்தது. எதிர்பார்த்தபடியே நான்காவது நாளில் கடுமையான அடியை வாங்கியிருக்கிறது. அதாவது 1 கோடி ரூபாய்தான் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆகமொத்தம் வெளியான நான்கு நாட்களிலேயே லால் சலாம் சமாதிக்கு சென்றுவிட்டது உறுதியாகியிருப்பதாக கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











