பாலியல் வன்கொடுமை வழக்கு.. எதற்காக சிறை சென்றேன்.. மன்சூர் அலிகான் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: மன்சூர் அலிகான் 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர். அவரது வித்தியாசமான உடல் மொழியும், நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக பிஸியான நடிகராக திகழ்ந்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கம்மியானதை அடுத்து அரசியலிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் தொடர்ந்து சர்ச்சையாகவும் பேசி வருகிறார். இந்தச் சூழலில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

அரசியலில் மன்சூர் அலிகான்: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென அரசியலிலும் குதித்தார். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். காலப்போக்கில் அந்தக் கட்சியும் காணாமல் போனது.
வைரல் மன்சூர்: நடிப்பு, அரசியலைத் தாண்டி தன்னுடைய செயல்பாடுகளால் அவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடியவர். அவர் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் பலருக்கு சிரிப்பு வரும்படி அமைந்தது. அப்படிப்பட்ட வீடியோக்களை நெட்டிசன்கள் அதிகம் பார்த்தும், பகிர்ந்தும்வந்தனர். மேலும் அரசியலில் களமிறங்கிய அவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
லியோவில் மன்சூர்: லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர். கைதி கதையையும் அவரை மனதில் வைத்துதான் எழுதினார். ஆனால் ஏதோ காரணத்தால் மன்சூரால் நடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்திலும், தனது தயாரிப்பில் சரக்கு படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் அவர், நடிகைகளுடன் படுக்கை காட்சியில் நிறைய டேக்குகள் வந்தால் ஜாலியாக இருக்கும் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் திரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் மாட்டினார்.
மன்சூர் பேட்டி:கடைசியாக சரக்கு என்ற படத்தில் நடித்த மன்சூர் அலிகான் இன்று நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சங்கம் இருக்கும்வரைதான் நடிகர்களால் சந்தோஷமாக இருக்க முடியும். நாங்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்துபவர்கள். சினிமாவை கேவலப்படுத்த சிலர் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் சினிமாவை விட்டுக்கொடுக்கக்கூடாது. சினிமாதான் மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
சிறை சென்றேன்: நான் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்தேன். நவம்பர் மாதம் 2011ஆம் ஆண்டு விடுதலையானேன். அதற்கு பிறகு அந்தப் பெண் எனக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற தீர்ப்பு வந்தது. இதில் யாருக்கு புகழ். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதும் தெரிந்துவிட்டது. நடிகர் சங்கம் அப்போது என்னை காப்பாற்ற வரவில்லை. நில ஆக்கிரமிப்பிலும் நான் சிறைக்கு சென்றேன். அரசியலில் நுழைய நான் எப்போது ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் நாசப்படுத்தப்பட்டேன். நாங்கள் யாரும் உத்தமர்கள் என்று சொல்லவில்லை. சராசரி மனிதர்கள்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











