96 பிரேமின் மெய்யழகன் படம் எப்படி இருக்கு?.. மக்கள் என்ன சொல்கிறார்கள்?.. பப்ளிக் விமர்சனம்
சென்னை: திரைத்துறையில் கேமரா மேனாக அறிமுகமாகி 96 படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பிரேம்குமார். இவர் இயக்கிய முதல் படமான 96 கல்ட் க்ளாசிக்காக உயர்ந்து நிற்கிறது. முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக்கொள்வது என்ற லைனை வைத்துக்கொண்டு காதலோடும், எமோஷனலுடனும் படத்தை கொடுத்து கவர்ந்துவிட்டார். அவர் இப்போது மெய்யழகன் படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்தி, அரவிந்த் சாமி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் நாளை ரிலீஸாகவிருக்கும் சூழலில் மக்களுக்கான சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது.
காதல் படங்கள் தமிழ் சினிமாவில் வருவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் புது விதமாக வருவதுதான் கொஞ்சம் அரிதாகிப்போயிருக்கிறது. அப்படி அரிதாக வந்த படங்களில் ஒன்று 96. அந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்போதும் அந்தப் படத்தை தீவிரமாக கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியிருக்கிறார் பிரேம்.

மெய்யழகன்: முதலில் இந்தப் படத்தின் கதையை ஒரு புத்தகமாகத்தான் எழுதியிருந்தார் பிரேம். ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் மூலமாக கார்த்திக்கு இந்தக் கதை பற்றி தெரியவர; பிரேம் எழுதிய புத்தகம் கார்த்தியின் கைகளுக்கு சென்றது. கதையை வாசித்த அவர் ரொம்பவே ஈர்க்கப்பட்டு தனது சகோதரர் சூர்யாவின் 2டி கம்பெனியை தயாரிக்க வைத்தார். கார்த்தியுடன் அரவிந்த் சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
பட்டையை கிளப்பிய ட்ரெய்லர், பாடல்கள்: பிரேமின் இயக்கம் என்பதால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் டீசருக்கு கிளர்வோட்டம் என்ற தமிழ் சொல்லை வைத்து அசத்தியது படக்குழு. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஆடியோ லான்ச்சில் பேசிய கார்த்தி, இந்தப் படம் ஒரு அபூர்வம். இதுவும் ஒரே இரவில் நடக்கும் கதையாகத்தான் இருக்கிறது. அவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று பெருமைப்பட்டார். அதேபோல் சூர்யாவும், இந்தப் படத்தை கண்டிப்பாக கொண்டாடுங்கள். 96 படம் மேல் எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. பிரேம் நல்ல இயக்குநர் என்று புகழாரம் சூட்டினார்.
நாளை ரிலீஸ்: ஒருபக்கம் படத்தில் பணியாற்றியவர்கள் படத்தை கொண்டாடிக்கொண்டிருக்க; படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களும், ரொம்ப நாட்கள் கழித்து ஒரு தரமான படம் வரப்போகிறது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாவதாக ஓபனாக பேசிவருகிறார்கள். இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புடன் நாளை படம் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க மக்களுக்கான சிறப்பு காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது.
பப்ளிக் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகை ஒருவர் பேசுகையில், "பழைய நினைவுகளை பலர் மறந்திருக்கும் சூழலில் இப்போது அதை இந்தப் படத்தின் மூலம் நினைவுப்படுத்தியிருக்கிறார்கள். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். நார்மலாக இருந்தது". அவரைத் தொடர்ந்து ஒரு ரசிகர் பேசுகையில், 'இந்தப் படத்தில் எல்லா சீன்களுமே கனெக்ட் ஆகின்றன. படம் செமயாக இருந்தது. இரண்டு பேர்தான் பிரதானமாக இருந்தாலும் வசனங்களும், திரைக்கதையும் மிக அருமையாக இருந்தது' என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இளம் ரசிகை ஒருவர், 'ஒட்டுமொத்தமாக இந்தப் படம் மிக சிறப்பான உணர்வை கொடுத்தது. ஃபிளாஷ் பேக் சொல்லும் இடம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. ப்ளீஸ் சொல்லிடுங்களேன் என்று தோன்றியது' என்றார். அடுத்ததாக ஒரு ரசிகர் கூறுகையில், 'படம் உண்மையில் நன்றாக இருந்தது. குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் இது. கார்த்தியும், அரவிந்த் சாமியும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையை பொறுத்தவரையும் ரொம்பவே சூப்பர். க்ளைமேக்ஸில் வரும் பாடல் எல்லாம் சூப்பர்' என்றார். அதேபோல் குடும்ப சகிதமாக வந்தவர்கள் கூறுகையில், படம் சூப்பராக இருக்கிறது. எமோஷனல் எல்லாம் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. கண்டிப்பாக படம் பார்க்கலாம் என்றனர்.


Click it and Unblock the Notifications











