சார்பட்டா பரம்பரை 2 பட தாமதத்துக்கு இதுதான் காரணமா?.. என்ன செய்யப்போகிறார் பா.இரஞ்சித்
சென்னை: பா.இரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பிறகு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர். இதனாலேயே அவர் வெகு சில படங்களில் கவனம் பெற்ற இயக்குநராகிவிட்டார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் சார்பட்டா பரம்பரை 2 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் 80கள், 90களில் ஆதிக்க சாதிகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதேபோல் திரைப்படத்தின் தலைப்பிலேயே சாதி பெயரை வைத்தும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தற்போது தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறுவதுபோல் திரைப்படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

விதை போட்ட இயக்குநர் பா.இரஞ்சித்: ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதுபோலவும் திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததற்கு விதை போட்டது பா.இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அந்தப் படத்தில் பல காட்சிகள் ஆதிக்கவர்க்கத்தினரை ஒடுக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய காலா, கபாலி உள்ளிட்ட படங்களும் அதே ஜானரில் வந்தன. இரஞ்சித் தொடங்கிவைத்த இந்த கலாசாரத்தை பலர் வரவேற்றனர்.
மாரி செல்வராஜ், வெற்றிமாறன்: அவர் இவ்வாறு படம் எடுக்க ஆரம்பித்ததை அடுத்து பல படைப்பாளிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் வெற்றிமாறன், மாரி செல்வராஜும்கூட அடக்கம். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்கூட பா.இரஞ்சித் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெரிய வரப்பிரசாதம் என்று மணிரத்னம் புகழ்ந்திருந்தார். அவர் மட்டுமின்றி பல இயக்குநர்கள் இரஞ்சித்தை மனதார பாராட்டிவருகின்றனர்.
தங்கலான்: அவரது இயக்கத்தில் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து அவர் இப்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. கோலார் தங்க வயலில் மக்கள் பட்ட கஷ்டங்களை மையப்படுத்தி பீரியட் ஜானரில் இருந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப திட்டமிருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பட்டா பரம்பரை 2: இதற்கிடையே பா.இரஞ்சித் இயக்கிய படங்களில் முக்கியமான படங்களில் ஒன்று சார்பட்டா பரம்பரை. கடந்த 2021ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான் அப்படம் மெகா ஹிட்டடித்தது. முக்கியமாக வடசென்னை வாழ்வியலில் குத்துச்சண்டை எப்படியெல்லாம் கலந்திருந்தது என்பதை மிக அருமையாக சொல்லியிருந்தார். ஆர்யாவுக்கும் பெயர் கிடைத்தது. இந்தச் சூழலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை 2 குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை S ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்போது S ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் காரணமாக இந்த புராஜெக்ட்டிலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதனை தனியாக தயாரிப்பதா இல்லை வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதா என்று பா.இரஞ்சித் குழப்பத்தில் இருப்பதாகவும் அதனால்தான் பட தாமதத்துக்கு காரணம் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications











