மாநாடு எஸ்.ஜே.சூர்யா நடித்த ரோலில் இத்தனை பேர் நடிக்கவிருந்தார்களா?.. லிஸ்ட் பெருசா போகுதே
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார்.
நடிகராக கலக்கிய சூர்யா: கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள்வரை தொடர்கிறது. அவர் நடிக்கும் படங்களில் அசால்ட்டாக தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துவிட்டு சென்றுவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன
மாநாடு: இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பயணத்துக்கு டாப் கியர் போட்டது என்றால் மாநாடு படம்தான். வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படத்தில் சீனுக்கு சீன் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார் சூர்யா. அதனைப் பார்த்த பிறகு தான் சூர்யாவுக்குள் இப்படி ஒரு அசுரத்தனமான நடிகரா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்நிலையி அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை வேறு சிலர் ஏற்கவிருந்தார்கள்.
முதலில் பசுபதியிடம்தான் வெங்கட் பிரபு இந்த ரோலில் நடிக்க கேட்டாராம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதேபோல் கிச்சா சுதீப், ரவி தேஜா உள்ளிட்டோரிமும் இந்த ரோல் குறித்து கேட்டாராம். அவர்களுக்கும் பிடித்துப்போக; ஆனால் கால்ஷீட் பிரச்னையால் நடிக்கவில்லையாம். அதேபோல் அரவிந்த் சாமியும் நடிக்க வேண்டியிருந்த சூழலில் அவராலும் நடிக்க முடியவில்லை. பிறகுதான் எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்துக்குள் வந்திருக்கிறார். இதனை சுரேஷ் காமாட்சி ஒரு பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











