தளபதி 69.. ஹெச்.வினோத் எடுத்திருக்கும் ஃபார்முலா இதுவா?.. விஜய்க்கு மெகா ப்ளாக் பஸ்டர்தான் போல
சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த ஐந்தாம் தேதி வெளியான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் சூழலில் படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்தது.
தமிழ் சினிமாவில் விஜய் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார் அவர். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக GOAT படத்தில் நடித்து முடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் GOAT படத்துக்கு முன்னதாக வெளியான லியோ படத்துக்கு இந்தப் படமே பரவாயில்லை என்ற எண்ணமும் ரசிகர்களிடையே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் நீண்ட நாட்கள் ஆரூடம் கூறிய சூழலில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சியின் பாடலும், கொடியும் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் விஜய்யை கோட்டைக்கு அனுப்பியே தீரவேண்டும் என்ற முழு முனைப்பில் அவரது ரசிகர்கள் உழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
களத்தில் விஜய்: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தடத்தை தமிழ்நாடு அரசியலில் வீரியமாக பதித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் விஜய். சமீபத்தில்கூட பெரியார் திடலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் விஜய். மேலும் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார். இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் விஜய் நடிக்கவிருக்கிறார். அசால்ட்டாக பல நூறு கோடி ரூபாய் கணக்கில் வியாபாரம் நடக்கும் ஒரு ஹீரோ சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள்.
தளபதி 69: விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படத்துக்கு தளபதி 69 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஹெச்.வினோத் இயக்க; கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்ற விஷயங்களை வைத்து; இந்தப் படம் கொஞ்சம் அரசியல் சாயத்தோடும்; சமூக அக்கறையுடனும் இருக்கும் என்பது உறுதியாகியிருப்பதாக ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தின் பூஜை: படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் விஜய்யுடன் நடிக்க கமிட்டானார்கள். பாபி தியோல் கங்குவா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களும் விமர்சன ரீதியாக பெரிதாக போகவில்லை என்ற கவலை ரசிகர்களிடையே இருக்கிறது. அதை ஹெச்.வினோத் போக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
தீரன் ஸ்டைல்: இந்நிலையில் இந்தப் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை தீரன் ஸ்டைலில் வினோத் உருவாக்கவிருப்பதாகவும்; இதில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கு என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











