வாரிசு படத்தின் தோல்வி.. வம்சி பைடிபள்ளியின் பரிதாப நிலைமை இதுவா?.. அய்யோ பாவம்
சென்னை: விஜய் நடிப்பில் கடந்தாண்டு வாரிசு திரைப்படம் வெளியானது. தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிபள்ளி அந்தப் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு துணிவு படத்துக்கு போட்டியாக ரிலீஸான வாரிசு படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக விஜய்யின் நடிப்பு, மேனரிஸம், வம்சியின் மேக்கிங் என அத்தனையையுமே ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள். இந்தச் சூழலில் வாரிசு படத்தின் தோல்வியால் வம்சி பைடிபள்ளிக்கு பரிதாப நிலைமை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.
GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் கேரளாவில் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்: முன்னதாக விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறது விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

வாரிவிட்ட வாரிசு: இதற்கிடையே கடந்தாண்டு வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார் விஜய். தில்ராஜு தயாரித்திருந்த அந்தப் படத்தில் விஜய்யுடன் ஷாம், சரத்குமார், பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதன்முறையாக தெலுங்கு இயக்குநருடன் விஜய் கை கோர்த்ததால் அந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்னைதான் கதை என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருந்தார் வம்சி. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
படுதோல்வி: படம் எதிர்பார்க்காததைவிட படுதோல்வி அடைந்தது. முக்கியமாக விஜய்யின் நடிப்பும், வம்சியின் மேக்கிங்கும் கடுமையாக கிண்டலுக்கு ஆளாகின. படத்தில் ஒன்றுமே இல்லையே என்று விமர்சித்தனர். அதுமட்டுமின்றி பட ரிலீஸுக்கு முன்னதாக வம்சி மற்றும் தில்ராஜூ ஆகியோரின் பேச்சுக்கள் கொஞ்சம் ஓவர் டோஸாகவே இருந்தன. படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படிப்பட்ட படத்தை எடுத்து வைத்துக்கொண்டா இருவரும் அந்தப் பேச்சு பேசினார்கள் என்று சமூக வலைதளங்களில் ஓபனாகவே கமெண்ட்ஸை பறக்கவிட்டனர்.
வம்சியின் பரிதாப நிலை?: இந்நிலையில் வம்சி பைடிபள்ளி இப்போது பரிதாப நிலைமையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, வாரிசு படத்தின் படுதோல்வி வம்சியின் பெயரை ரொம்பவே டேமேஜ் ஆக்கிவிட்டதாம். அதன் காரணமாக அவர் எந்த ஹீரோவிடம் கதை சொன்னாலும்; சொல்லி அனுப்புகிறோம் என்றே பதில் வருகிறதாம். எனவே எப்படியாவது ஒரு ஹீரோவை பிடித்து ஒரு மெகா ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறாராம் வம்சி. நினைப்பது நடக்குமா?.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











