மீண்டும் அந்த இயக்குநருடன் இணைகிறாரா விஷால்?.. இந்த முறை தப்பித்துவிடுவாரா?
சென்னை: விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் ரசிகர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் அரண்மனை 4 வந்து ஹிட்டடித்ததால் ரத்னம் கொஞ்சம் டல்லடித்தது. இந்தச் சூழலில் விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கலவையான விமர்சனம்: அந்த எதிர்பார்ப்போடு கடந்த மாதம் ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கூறினாலும்; இன்னொரு தரப்பினரோ எதிர்பார்த்தபடி இல்லை என்று பேசினார்கள். அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மெகா ஹிட்டானதால் ரத்னம் டல்லடித்துவிட்டது.
அடுத்த படம்: விரைவில் ரத்னம் படத்தை ஓடிடியில் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விஷாலின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்றும்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் படத்துக்கு முன்னதாக தனது இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை முடிப்பதற்கான பணியிலும் விஷால் இறங்கியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











