ஒரே நாளில் ரிலீஸாகும் கொட்டுக்காளி, வாழை.. அவசியம் பார்க்க வேண்டிய படங்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அதேபோல் கோலிவுட்டில் இப்போது சென்சேஷனல் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் வாழை. இதில் முழுக்க முழுக்க சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களுமே ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன. இரண்டு படங்களுக்குமே எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நீண்ட காலம் கழித்து நல்ல நேரம் பிறந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான தங்கலான், டிமான்ட்டி காலனி 2, ரகுதாத்தா ஆகிய மூன்று படங்களில் தங்கலானும், டிமான்ட்டி காலனி 2வும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றிருக்கின்றன. அண்மைக் காலமாக தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளே வருவதில்லை என்ற விமர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருக்கிறது.

ஆகஸ்ட் 23ல் இரண்டு படங்கள்: இதே பாசிட்டிவ் வைபோடு ஆகஸ்ட் 23ஆம் தேதியை எதிர்நோக்கி இருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அன்றைய தினம் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொட்டுக்காளி படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படமும் ரிலீஸாகவிருக்கின்றன. வினோத்ராஜும், மாரி செல்வராஜும் தமிழ் சினிமாவில் தனித்து ஜொலிக்க ஆரம்பித்திருக்கும் இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள்.
கொட்டுக்காளி: கூழாங்கல் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.வினோத்ராஜ். மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து கிளம்பி வந்த அவர் தனது முதல் படத்திலேயே உலக அளவில் கவனம் ஈர்த்தார். அந்தப் படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றது. ஒரு தந்தை, மகன் ஆகியோரை வைத்து கதையை லாவகமாக நகர்த்தி சென்று புதிய திரை மொழியை கையாண்டு மின்னினார் அவர். அந்த ஒரு படத்திலேயே வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட முக்கியமான இயக்குநர்களின் பார்வையில் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார்.
சூரியின் அடுத்த பாய்ச்சல்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது கொட்டுக்காளியுடன் வருகிறார் வினோத். படத்தின் ட்ரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. இந்தப் படமும் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வினோத்ராஜை சீனியர் இயக்குநர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதிலும் ட்ரெய்லரை பார்க்கையில் சூரியின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கிறது. படத்தில் இசையே இல்லை என்பது கவனிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
கண்டிப்பாக இந்தப் படம் வினோத்ராஜின் திரை மொழி, சூரியின் அசுரத்தனமான நடிப்பு ஆகியவற்றால் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. மேலும் படத்தை பார்த்த வெளிநாட்டினர் இது நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த கதையா என்று கேட்டு; இல்லை இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்து ஆச்சரியப்பட்டதை வைத்து; கொட்டுக்காளி தற்காலத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் என்பது உறுதியாகியிருக்கிறது. வினோத்ராஜ் போன்ற இயக்குநர்கள் இதே மாதிரி படங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டுமென்றால் அவர் இயக்கும் படங்களை தவறாமல் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் பார்க்க வேண்டும்.
வாழை: அதேபோல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகும் மற்றொரு படமான வாழை படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் அந்தப் படத்தில் பேசிய அரசியலும், ஒடுக்கப்பட்டவர்களின் வலியும் காலங்கடந்தும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும். அவரும் தனித்துவமான திரை மொழியை சொந்தமாக கொண்டவர். இதுவரை அவர் இயக்கிய மூன்று படங்கள் (பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்) சமூகத்தில் விவாதத்தை கிளப்பியவை.
வாழை: அவர் இப்போது முழுக்க முழுக்க சிறுவர்களை வைத்து வாழை படத்தை இயக்கியிருக்கிறது. சிறுவர்களை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் மாரி செல்வராஜ் அந்தக் கதைக்களத்தை எப்படி கொண்டு வந்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். நிச்சயம் இந்தப் படத்திலும் மண் சார்ந்த வாழ்வியலும், ஏகப்பட்ட வலிகளும் பொதிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்களும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. அதிலும் பாதவத்தி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படமும் கண்டிப்பாக ரசிகர்களை கலங்கடிக்க செய்யும் என்பதை பாதவத்தி பாடல் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி தமிழ் சினிமாவின் தற்கால இயக்குநர்களில் இரண்டு சிறந்த இயக்குநர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன. ரசிகர்களாகிய நமது கடமை தமிழ் சினிமாவை குறை சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற அடர்த்தியான, யாரும் பேச முடியாத அல்லது துணியாத கதைகளை எடுத்துவரும் இயக்குநர்களை உற்சாகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எனவே இரண்டு சிறந்த இயக்குநர்களின் படைப்புகளை புறந்தள்ளாமல் இருக்க வேண்டுமென்பதே திரை ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











