அரசியலில் மட்டுமில்லை திரைத்துறையிலும் கில்லிதான்.. ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த படங்கள் தெரியுமா?
சென்னை: திராவிட இயக்கங்களின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்ட அவர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும், ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக திகழ்ந்தவர். அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராக ஜொலித்த ஆர்.எம்.வி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 98. இந்தச் சூழலில் அவர் தயாரித்த திரைப்படங்கள் குறித்து இதில் பார்க்கலாம். அவர் தயாரித்த பல படங்களில் பாட்ஷாவும் ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். திராவிட இயக்கங்களின் கருத்தியலில் ஈர்ப்பு கொண்டு தன்னை திராவிடத்தோடு ஒன்றிணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்டவர். எம்ஜிஆரை பார்க்க வேண்டுமென்றால் முதலில் ஆர்.எம்.வியைத்தான் பார்க்க வேண்டும் என்ற பேச்சு அப்போதைய அரசியல் தளத்தில் எழுந்தது உண்டு.

கெத்து காட்டிய ஆர்.எம்.வி: எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது முதலில் ஜானகி அணியில் இருந்தவர் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். பிறகு ஜெயலலிதா அணி அதிமுகவை முழுதாக கைப்பற்றிய பிறகு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். எந்த அணியில் இருந்தாலும் தனது கெத்தை இழக்காமல் இருந்தார் ஆர்.எம்.வி என்று சொல்ல வேண்டும். இதற்கிடையே எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியையும் அவர் தொடங்கியது நினைவுகூரத்தக்கது.
சினிமாவில் ஆர்.எம்.வி: அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவர். எம்ஜிஆர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஆர்.எம்.வியிடம்தான் வழங்கினார் எம்ஜிஆர். அதனை திறம்பட நிர்வகிக்கவும் செய்தார். அதனால் ஆர்.எம்.வியின் பெயர் சினிமா துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.
எம்ஜிஆரின் படங்கள்: எம்ஜிஆர் பிக்சர்ஸில் தொழிலாளியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து முதலாளியாகவும் மாறினார். அந்தவகையில் எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான தெய்வ தாய் படத்தை முதலில் தயாரித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால் (1966), காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி உள்ளிட்ட படங்களை தயாரித்தார். எம்ஜிஆரை வைத்து ஆர்.எம்.வி தயாரித்த அத்தனை படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசனின் படங்கள்: எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் ஆர்.எம்.வி படங்கள் தயாரிப்பாரா என்று பலமாக கேள்வி எழுந்த சூழலில் பிற நடிகர்களை வைத்தும் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான பாட்ஷா: ஆர்.எம்.வி தயாரித்த படங்களில் பெரும்பாலான படங்களில் மெகா ஹிட் படங்களாகவே அமைந்தன. அதில் முக்கியமான படம் என்றால் பாட்ஷாதான். படம் ஒருபக்கம் பிரமாண்ட வெற்றி பெற்றாலும்; அந்த வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சுஆர்.எம்.வி மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று பலரும் சொல்வார்கள். ஏனெனில் அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று சொல்லிவிட்டார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்.எம்.வியின் அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் பிடுங்கப்பட்டது என்ற தகவலும் உண்டு.
சத்யஜோதி பிலிம்ஸ்: ஒருகட்டத்தில் வயோதிகம் காரணமாக அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் அவர். பிறகு அவரது குடும்பத்திலிருந்து தியாகராஜ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எம்.வீரப்பனின் உயிரிழப்பு: ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவின் தீவிர அபிமானியாக இருந்தாலும் திமுக தலைவர்களுடனும் நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வி. கடந்த வருடம்கூட அவரது வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











