Blue Sattai Maran - ப்ளீஸ் ஜவானை தியேட்டரில் பாருங்க.. இல்ல அட்லீ இங்க வருவாரு.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: Blue Sattai Maran Jawan Review (ப்ளூ சட்டை மாறன் ஜவான் விமர்சனம்) திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஜவான் படத்துக்கு தனது விமர்சனத்தை வழங்கியிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜவான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைப்பில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து திரையரங்குகளுக்கு சென்றனர்.

பெரும்பாலும் பாசிட்டிவ்தான்: படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். ஷாருக்கானை பல கெட்டப்புகளில் பார்க்க புதிதாக இருக்கிறது என்றும்; சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை கமர்ஷியல் பேக்கேஜோடு அட்லீ கொடுத்திருக்கிறார் என்று ஏகத்துக்கும் புகழ்ந்துவருகின்றனர். இதன் காரணமாக பாலிவுட்டில் அட்லீ அழுத்தமாக தனது தடத்தை பதித்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.
பாக்ஸ் ஆபிஸ்: படமானது முதல் நாளில் ஹிந்தியில் மட்டும் 60லிருந்து 65 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே ஷாருக்கான் நடிப்பில் இதற்கு முன் வெளியான பதான் படம் போல் ஜவான் படமும் கண்டிப்பாக 1000 கோடி ரூபாயை வசூலித்துவிடும் என இப்போதே பலர் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஜவான் படத்துக்கு தனது விமர்சனத்தை வழங்கியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், "மெட்ரோ ரயில் கடத்தலிலிருந்து கதை தொடங்குகிறது. அந்த கடத்தலை முடித்த பிறகு பணத்தை வாங்கி பலருக்கு கொடுத்துவிட்டு ஹீரோவும் அந்தப் பெண்களும் திரும்பி போகும் இடம் என்னவென்று பார்த்தால் ஜெயில். ஹீரோ ஜெயிலராம்.
இதுதான் ஜெயிலர்: பார்த்தால் அவர் ஜெயிலர் மாதிரி இல்லை ஜெயிலை கட்டியிருக்கும் ஓனர் மாதிரி இருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம் இந்த ஜெயில் எங்கே இருக்கிறது. இரண்டு கொலைகளை செய்துவிட்டு அங்கு போய்விடலாம் போல என சொல்கிறார்கள். உண்மையில் இந்தப் படத்துக்குத்தான் ஜெயிலர் என்று பெயர் வைத்திருக்க வேண்டும்.
நயன் லிமிட் என்ன?: நயன்தாராதான் எல்லாத்துக்கும் செல்கிறார். அவர் சாதாரண வுமனா இல்லை சூப்பர் வுமனா என்று தெரியவில்லை. ஹெலிகாப்டரில் எல்லாம் போகிறார். அவருடைய லிமிட் என்னவென்றே தெரியவில்லை. ஹீரோ பெண் பார்க்க சென்றால் அந்த பெண்ணும் நயன்தாராதான். ஒரே குழப்பமாக இருக்கிறது.
எத்தனை கதை: ஆறு பெண்களில் மொத்தம் மூன்று பெண்களுக்கு கதைகளை சொல்கிறார்கள். அய்யய்யோ மீதம் இருக்கும் மூன்று பெண்களுக்கு கதை சொல்லி கொல்லப்போகிறார்கள் என்று பார்த்தால் நல்ல வேளை அந்த மூன்று கதைகளோடு விட்டுவிட்டார்கள். இரண்டாவது பாகத்துக்காக அந்தக் கதைகளை எடுத்து வைத்திருப்பார்கள் போல.

அவர் படத்திலிருந்தே காப்பி: ஒவ்வொரு படத்திலிருந்தும் ஒவ்வொரு சீனை எடுத்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அவர் எடுத்த படத்திலிருந்தே காப்பி அடித்திருக்கிறார். அவர் ஏற்கனவே எடுத்த படங்கள் காப்பிதான். அதிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார். கடைசியாக வேட்பாளரை பார்த்து தேர்ந்தெடுக்க மாட்டீர்களா என நம்மிடம் கேட்கிறார்கள். ஏங்க அவ்வளவு யோசிப்பவர்களாக இருந்தால் நாம ஏன் இந்தப் படத்துக்கு போகப்போறோம். இந்த சீன் அந்தப் படத்துல வந்துருக்கே; அந்த சீரியலில் வந்துருக்கே என்று நம்மை திவீரமாக சிந்திக்க வைக்கிறார்கள்.
ப்ளீஸ் தியேட்டரில் பாருங்க: முழுக்க முழுக்க கிரிஞ்ச் மேக்ஸ் ப்ரோவாக வளர்ந்து நிற்கிறார் அட்லீ. பொதுவாக சுமாரான மொக்கை படத்தை பார்த்தால் தியேட்டருக்கு போகாதீர்கள் என்று நாங்கள் சொல்வோம். இது சூர மொக்கை படம். இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து ஹிட்டாக்கிவிடுங்கள். அப்போதுதான் பாலிவுட்டில் சல்மான் கான், ஆர்யன் கான்வரை படம் எடுத்துக்கொண்டு அங்கேயே சுத்தி அந்த ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துவிடுவார் அட்லீ. இல்லையென்றால் என் அண்ணனுக்கு நான்தான்டா செய்வேன் என சொல்லிக்கொண்டு மீண்டும் தமிழுக்கு வந்துவிட்டால் நம்ம நிலைமையை யோசித்து பாருங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











