The Equalizer 3 - விஜய் பார்த்த தி ஈக்வலைஸர் 3.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் என்ன தெரியுமா?..
சென்னை: The Equalizer 3 Review (தி ஈக்வலைஸர் 3 விமர்சனம்) நடிகர் விஜய் பார்த்த தி ஈக்வலைஸர் 3 படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
தி ஈக்வலைஸர் ட்ரையலாஜி படத்தின் தி ஈக்வலைஸர் 3 நேற்று ரிலீஸானது. ரிச்சர்ட் வென்க் எழுத்தில் ஆண்டொய்ன் ஃபக்குவா இயக்கத்தில் டென்சல் வாஷிங்டன், டகோட்டா ஃபானிங், டேவிட் டென்மேன், சோனியா அம்மர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வந்த இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால் இந்தப் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஃபேன் பாய் விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 68ஆவது படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்கள் அவரும், வெங்கட் பிரபுவும். 3டியில் விஜய்யின் முழு உடம்பும் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் வெளியாகி ட்ரெண்டான சூழலில் அமெரிக்காவில் தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் பார்க்கும் புகைப்படத்தை வெங்கட் பிரபு இன்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தை அடுத்து தமிழ்நாட்டில் பலரும் டென்சல் வாஷிங்டன் குறித்தும், தி ஈக்வலைஸர் படம் குறித்தும் அதிகம் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தி ஈக்வலைஸர் படம் குறித்த தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் தன்னுடைய விமர்சனத்தில், "படத்தின் ஆரம்பத்திலேயே ஹீரோ பெரிய சம்பவம் பண்ணிட்டு வரப்போ சின்ன பையன் ஹீரோவை பொட்டுனு சுட்டுப்புடுவான். காயம் ஆறுவதற்காக அந்த ஊரிலேயே தங்கி அந்த மக்களுடன் பழகி, உணவு பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி அந்த ஊரிலேயே செட்டில் ஆகிவிடுகிறார்.
எம்ஜிஆர் மாதிரி: இந்த சூழ்நிலையில ஒரு பையன் சில சில்லறை வேலைகளை செய்கிறான். ஆனால் அந்த பையனோட அண்ணன் பெரிய டான். அந்த ஊரில் இவருக்கு பிரச்னை தேடி வருகிறது. இவர் விலகி போகிறார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் மாதிரி மூன்று குத்துவரை தாங்குகிறார். அதற்கு பிறகு திருப்பி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

மறக்க முடியாத படம்: ஈக்வலைஸர் 1 நமது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். அதன் இரண்டாம் பாகமும் நல்ல படம்தான். அந்தப் படங்களை ரசித்து பார்த்ததற்கு காரணம் லைவ்வான, ஸ்டைலிஷான ஆக்ஷன். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இடைவேளைவரை ஃபைட்டே இல்லை. முன்னர் எல்லாம் நம்ம ஆட்கள் ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடிப்பார்கள்.
காப்பி அடித்துவிட்டார்கள்: இப்போது ஹாலிவுட்காரர்கள் தமிழ் படம், தெலுங்கு படம் எல்லாத்தையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் போல. ஈக்வலைஸர் சீக்வலில் இதுதான் கடைசி பாகம் என அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை படத்தை எடுத்த பிறகு போட்டு பார்த்திருப்பார்கள் போல. முதல் இரண்டு பாகங்கள் போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு போகாதீர்கள். இதை ஒரு முறை பார்க்கலாம்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











