Jailer - ஜெயிலர் படம் எப்படி இருக்கு?.. சென்சார் சொன்ன விமர்சனம் இதுவா?
சென்னை: Jailer Review (ஜெயிலர் விமர்சனம்) ஜெயிலர் படத்தை பார்த்த சென்சார் குழு படத்துக்கு கொடுத்த விமர்சனம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.
இரண்டு சிங்கிள்கள்: படத்திலிருந்து முதலில் காவாலா என்ற பாடல் வெளியானது. பாடலை அருண்ராஜா காமராஜா எழுதியிருந்தார். தெலுங்கில் ஆரம்பித்து தமிழில் செல்லும்படி வரிகள் அமைந்திருந்தன. பாடல் கொண்டாடப்பட்டாலும் அதில் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்தது தமன்னாதான். அதற்கு அடுத்ததாக ஹுக்கும் என்ற பாடல் வெளியானது. சூப்பர் சுப்பு எழுதியிருந்தார்.

கிளம்பிய சண்டை: இரண்டாவது பாடலின் வரிகள் முழுக்க முழுக்க ரஜினியை புகழ்ந்தபடியே எழுதப்பட்டிருந்தன. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று பேச்சு எழுந்திருக்கும் சூழலில் அந்தப் பாடல் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்தது. ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் சண்டை வரும்படி எழுதுவது எனது நோக்கமல்ல கதைக்கு தேவைப்பட்டதால்தான் அப்படி எழுதினேன் என அவர் விளக்கமளித்திருந்தார்.
மூன்றாவது சிங்கிள்: இந்தச் சூழலில் படத்திலிருந்து ஜுஜுபி என்ற மூன்றாவது சிங்கிள் நேற்று வெளியானது. வழக்கமான அனிருத் பாடல் போல இது இருந்தாலும் பாடலின் வரிகள் இதில் தெளிவாக கேட்கின்றன. மேலும் இந்தப் பாடலின் வரிகளை வைத்தும் விஜய்யை தாக்கி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இந்தப் பாடலை சூப்பர் சுப்பு எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன்னிங் டைம் எவ்வளவு: இதற்கிடையே படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மேலும் படம் ஆக்ஷன் படமாக உருவானாலும் நெல்சன் ஸ்டைல் டார்க் காமெடி இதிலும் இருக்கும் என கூறப்படுகிறது. படமானது மொத்தம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் என கூறப்பட்டுள்ளது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
சென்சார் விமர்சனம்: இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படம் குறித்த விமர்சனத்தை கூறியிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் வழக்கமான ரஜினி படங்கள் போல் இல்லை. நெல்சன் திலீப்குமாரின் ஸ்டைலான டார்க் காமெடியில் ரஜினியை பார்ப்பதற்கே புதிதாக இருக்கிறது என்று அவர்கள் விமர்சனம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் படத்தை பார்த்த ரஜினியும் முழு திருப்தியுடன் இருக்கிறார் என படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











