Soori - வாய் பிளக்க வைக்கும் புரோட்டா சூரியின் சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே
சென்னை: நடிகர் சூரி காமெடி நடிகராக வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் அறிமுகமானார். அதில் பரோட்டா சாப்பிடும் காட்சியின் மூலம் வெகு பிரபலமடைந்த அவர் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னணி காமெடி நடிகர் என்ற பெயரை பெற்றார். தற்போது அவர் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
ஏழு கடல் ஏழு மலை: மேலும் விடுதலை 2 படத்தில் நடித்துவரும் சூரி; ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. அந்த க்ளிம்ப்ஸில் சூரியுடன் நிவின் பாலி உரையாடுவது போன்ற காட்சிகள் இருந்தன. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சூரி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து மதிப்பு: நடிகர் சூரி நடிப்பு தவிர்த்து ஹோட்டல் தொழில் உள்ளிட்ட தொழில்களையும் செய்துவருகிறார். மதுரையில் அவருக்கு சொந்தமாக ஹோட்டல் இருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 45லிருந்து 50 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குவதாகவும் ஒரு தகவல் உண்டு.


Click it and Unblock the Notifications











