Ayalaan Box Office Collection Day 2 - இரண்டாவது நாளில் அயலான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன தெரியுமா?
சென்னை: இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்தின் மூலமே பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று முன் தினம் படம் வெளியானது.
சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கேற்றபடி மாவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய அவர், இந்த முறை மிஸ் ஆகாது என்று பேசியிருந்தார். அதேபோல் படமும் ஹிட்டானது.
அயலான்: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை ஒன்லைனாக கொண்டு படம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு படத்தின் ஷூட்டிங்கும் முடிந்தது. ஆனால் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதற்கு காரணம் கிராபிக்ஸ் பணிகள் என்று கூறப்பட்டாலும்; பண பிரச்னைதான் பிரதான காரணம் என்று திரைத்துறையில் பேச்சு ஓடியது.
அயலான் ரிலீஸ்: இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷுக்கு போட்டியாக இந்த பொங்கல் பண்டிகையில் களத்தில் குதித்தார் சிவகார்த்திகேயன். எனவே இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி?: ஏலியன் ஜானரில் படம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக குழந்தைகளை கவர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எஸ்கே ரசிகர்களிடையே இருந்தது. அந்த ஆவலோடு படத்துக்கு சென்ற ரசிகர்கள் படத்துக்கு டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். அதிலும் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெய் சிலிர்க்க வைப்பதாகவும்; கதை சாதாரண கதைதான் என்றாலும் ஏலியனையும், தன்னுடைய ஸ்க்ரீன் பிளேவையும் வைத்து ரவிக்குமார் காப்பாற்றிவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறினர்.
அயலான் வசூல்: இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி படமானது இரண்டாவது நாளில் 4.51 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக படம் வெளியான முதல் நாளில் 5 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் நாளை ஒப்பிடுகையில் இரண்டாவது நாள் வசூல் கொஞ்சம் டல்லடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் இரண்டு நாட்களில் படம் 10 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











