Dhruva Natchathiram - தீர்ந்ததா துருவ நட்சத்திரம் பஞ்சாயத்து?.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான தகவல்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு விக்ரமை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். சூர்யாவிடம் முதலில் சென்ற இந்த கதை அதன் பிறகு விக்ரமிடம் வந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் பண பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. ஒருவழியாக கடந்த நவம்பர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ரிலீஸாகவில்லை. இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ரிலீஸ் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அடுத்தடுத்து இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். போலீஸ் ஸ்டோரி மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய ஜானர்களில் தனது தனித்துவமான மேக்கிங்கால் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.

துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி இருக்க துருவ நட்சத்திரம் என்ற கதையை முதலில் சூர்யா மற்றும் ரஜினியிடம் கௌதம் சொல்ல இருவராலும் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானார். படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு பிரச்னை: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த முடிக்கப்பட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக விக்ரமும், கௌதம் மேனனும் தங்களது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர். கௌதம் மேனன் நடிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவே அவர் பல படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் லியோ படத்தில் நடித்திருந்தார். இடையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படமும் வரவேற்பையே பெற்றது.
தொடங்கிய வேலைகள்: இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்தனர். அதன்படி படமானது கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்கு கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.
வழக்கு விசாரணை: ஆல் இன் பிக்சர்ஸ் தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது கௌதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடும் திட்டம் இருக்கிறது. எனவே இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என கோரினார். அதனை ஏற்று வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரியில் ரிலீஸ்?: பிப்ரவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கௌதம் மேனன் தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருப்பதன் காரணமாக அதற்குள் பணத்தை செட்டில் செய்யும் முடிவில் கௌதம் இருக்கிறார். அதனால் அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் ரிலீஸாவது உறுதி என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











