சேனாபதி தாத்தாவுக்கு ஆயுள் முடிந்ததா?.. இந்தியன் 2 நான்காம் நாள் வசூல் இவ்வளவுதானா?
சென்னை: சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த கமல் ஹாசனுக்கு விக்ரம் படம் கம்பேக்காக அமைந்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. எனவே அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் இயக்கியிருந்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும். அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்" போன்ற வசனங்கள் எல்லாம் சுஜாதாவின் பேனாவிலிருந்து உதிர்ந்து இன்றுவரை ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க திட்டமிடப்பட்டது. அட இந்தியன் 2வா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கண்டிப்பாக இந்தியன் படத்தின் முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் இருக்கும் என்று ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள்.
படத்தில் பிரச்னை: ஆனால் படம் பெரிதாக கவரவில்லை. இந்தியன் 2வின் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவது ஷங்கரின் மேக்கிங்கும், எடுபடாத வசனங்களும்தாம். ஏனெனில் படத்தின் முதல் பாகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் பெரும் பங்காற்றியது. சிறு சிறு வசனங்களில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை நீக்க முடியாதது. ஆனால் இந்தியன் 2வில் அப்படி ஒரு வசனம்கூட இல்லை. அதேபோல் மக்கள் கூட்டத்தை கூட்டி ஒரு காட்சியை எடுத்தால் போதும் பிரமாண்டமாகிவிடும் என்று ஷங்கர் நினைத்துவிட்டார்போல; திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் சுவாரசியமே இல்லை என்பதும் பலரின் விமர்சனமாக இருக்கிறது.
கலவையான விமர்சனம்: ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக இந்தியன் 2 இருந்தது. மேக்கிங்கோ, வசனமோ, இசையோ எதுவுமே ஈர்க்கவில்லை. இந்தியன் எப்படிப்பட்ட படம்; அதற்கு இரண்டாவது பாகம் எடுக்கிறேன் என்கிற பெயரில் எதையோ எடுத்து வைத்திருக்கிறார்களே என்று ஓபனாகவே ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். இதன் காரணமாக படக்குழு பெரும் அப்செட் ஆனது. மேலும் படத்தை எபப்டியாவது தப்பிக்க வைக்க வேண்டுமென்பதற்காக 20 நிமிடங்கள் ட்ரிம்மும் செய்யப்பட்டது. மேற்கொண்டு 15 நிமிடங்களும் ட்ரிம் செய்யப்பட்டிருக்கிறது.
வசூல்: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படம் வெளியான முதல் நாளில் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 18 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 15 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக கூறப்பட்டது. நாளுக்கு நாள் படத்தின் வசூல் குறைந்துகொண்டே சென்ற நிலையில் நான்காவது நாளான நேற்றைய வசூல் மொத்தமாக படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று இந்தியாவில் வெறும் 5 கோடி ரூபாய் வரை தான் படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே படத்துக்கு தொடர்ந்து அடி விழுந்துவருவதால் ஆகஸ்ட் மாதமே ஓடிடியில் இந்தியன் 2வை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











