Jailer Collection - ஜெயிலர் வசூல்.. கமல் படத்தின் லைஃப் டைம் வசூலை அடித்து நொறுக்கிய ரஜினி
சென்னை: Jailer Collection (ஜெயிலர் வசூல்) ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது.

தலைவர்னா மாஸ்: ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருக்குமே இந்தப் படத்தின் ஹிட் அவசியப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் தங்களை ரொம்பவே திருப்திப்படுத்திவிட்டதாகவும்; இரண்டு பேருமே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டதாகவும் முதல்நாள் முதல் காட்சி முடிந்ததுமே சமூக வலைதளங்களில் பாசிட்டிவ்வாக பேச ஆரம்பித்துவிட்டனர்.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: குறிப்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்த பிறகு குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி வரிசையான விடுமுறை நாட்களை சரியாக குறி வைத்து அடித்ததால் தியேட்டருக்கு செல்லும் கூட்டம் குறையவில்லை. இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் ஜெயிலர் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.
வசூல் நிலவரம்: படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் 29 கோடி ரூபாயையும் வசூலித்ததாக கூறப்பட்டது. இது வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை. முன்னதாக துணிவு முதல் நாளில் தமிழ்நாட்டில் 23 கோடி ரூபாயை வசூலித்ததாக தெரிகிறது. அடுத்தடுத்த நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் சென்றது.
400 கோடி ரூபாய்: படம் வெளியாகி ஆறு நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றோடு படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்திருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தெரிய வந்திருக்கிறது. அதன்படி படமானது 416 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரமின் லைஃப் டைம் வசூலை நொறுக்கிய ஜெயிலர் : முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருந்த விக்ரம் படம் உலகம் முழுவதும் 410 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அந்தப் படத்தின் லைஃப் டைம் வசூலை ஜெயிலர் படம் ஒரே வாரத்தில் அடித்து நொறுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் களத்துல தலைவர்தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என கமெண்ட்ஸை பறக்கவிட்டு வருகின்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டதால் சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வமான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











